ஜீன்ஸ், டி ஷர்ட், லெக்கிங்ஸுக்கு தடை - அசாமில் உயர் கல்வி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: அசாமில் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆண் - பெண் ஆசிரியர்களுக்கு அம்மாநில உயர் கல்வித் துறை ஆடைக் கட்டுப்பாடு விதித்து அதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அசாம் உயர் கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், "உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் விருப்பம்போல் உடை அணிந்து வருகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் அணிந்து வரும் உடை, பொதுமக்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. ஜீன்ஸ், டி ஷர்ட், லெக்கிங்ஸ் போன்ற உடைகளில் ஆசிரியர்கள் பணிக்கு வருவது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் கண்ணியமாகவும், நாகரிகமாகவும் உடை அணிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் இருக்கிறது. குறிப்பாக, பணி செய்யும் நேரங்களில் அவர்கள் அணியும் உடை, நாகரிகமானதாகவும், பணிக்கு ஏற்றதாகவும், கண்ணியமானதாகவும் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் தூய்மையான, கண்ணியமான ஆடைகளை உடுத்த வேண்டும். அவை கண்களுக்கு பளிச்சென்று தோன்றக் கூடாது. வீடுகளில் சாதாரணமாக உடுத்தக்கூடிய உடைகளையும், கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அணியக்கூடிய உடைகளையும் பணி இடங்களில் உடுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஆண் ஆசிரியர்கள் சட்டை மற்றும் பேன்ட் அல்லது வேட்டி-பைஜாமா அணிந்து வர வேண்டும். அதேபோன்று, பெண் ஆசிரியர்கள் கண்ணியமான சல்வார், சேலை மற்றும் பிற பாரம்பரிய உடைகளை அணிந்து வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை கடந்த மே மாதம் வெளியிட்ட அசாம் அரசு, உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்போது இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அசாம் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்வினைகள் கலவையாக உள்ளன. பாரம்பரியத்தின் மீது நாட்டம் உள்ளவர்கள் இதை வரவேற்கிறார்கள். அதேநேரத்தில், மற்றவர்கள் கண்ணியம் என்றால் என்ன, நாகரிகம் என்றால் என்ன என்பது குறித்து அரசு வரையறை செய்ய வேண்டும். அதோடு, அரசு தவிர்க்க வலியுறுத்தும் ஆடைகள் விற்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE