கு
ஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாஜக சராசரியாக ஒவ்வொரு முறையும் 120 தொகுதிகளுக்கு குறையாமல் வென்றுவந்திருக்கிறது. இந்த முறை ‘150 +’ என்கிற இலக்கோடு தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது அந்தக் கட்சி. ஆனால், மக்களை கவரும் வகையில் பாஜக-வில் மாநில தலைவர்கள் ஒருவரும் இல்லாத நிலையில் மொத்த கட்சியும் மோடியை மட்டுமே நம்பியிருக்கிறது.
குஜராத் தேர்தலுக்காக அங்கு சுற்றிய அனுபவத்திலிருந்து தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள முடிந்தது - ஜெயலலிதா காலத்திலிருந்த அதிமுக-வுக்கும் தற்போது மோடியின் தலைமையில் இருக்கும் பாஜக-வுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் இருக்கிறது பாஜக-வின் ‘மீடியா சென்டர்’. பன்னாட்டு நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையிலிருக்கிறது அந்த பிரம் மாண்டமான அலுவலகம். முகப்பிலிருந்து பின்வாசல் வரை மோடி மட்டுமே முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். வரவேற்பறையை அலங்கரிக்கும் ஆல்பத்தின் 31 புகைப்படங்களில் மூன்றில் மட்டுமே வாஜ்பாய் இருக்கிறார். ஒன்றில் மட்டும் அத்வானி இருக்கிறார். மோடி அடிக்கடி உச்சரிக்கும் சர்தார் வல்லபாய் படேலின் படமும்கூட அங்கில்லை. புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருக்கும் 40 நூல்களும் மோடியை முன்னிறுத்தி எழுதப்பட்டவை அல்லது மோடியால் எழுதப்பட்டவை.
கடுமையான கட்டுப்பாடுகள்
கட்சியின் விதிமுறைகளும் கடுமை. யாரெல்லாம் பத்திரிகையாளர்களிடம் பேச வேண்டும், யாரெல்லாம் பேசக்கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களின் கேள்விகளும்கூட முன்கூட்டியே வாங்கப்பட்டு வடிகட்டப்படுகின்றன. எதிர்மறையான கேள்விகளுக்கு இடமில்லை. மோடியைப் பற்றி கேள்வியை தொடங்கும்போதே எச்சரிக்கை அடைகிறார்கள். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் மனப்பாடம் செய்து வைத்ததைப்போல ‘வளர்ச்சி மட்டுமே எங்கள் குறிக்கோள்’ என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கிறது. கடந்த 20 ஆண்டு கால சட்டசபை தேர்தல்களில் சந்திக்காத நெருக்கடியை முதல்முறை யாக அந்தக் கட்சி இம்முறை சந்திக்கிறது.
தவிரவும், கடந்த காலங்களில் படேல் உள்ளிட்ட ஆதிக்க சமூகங்களின் முழு ஆதரவும் பாஜக-வுக்கு இருந்தது. மக்களை வெகுவாக பாதித்த பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு போன்ற பிரச்சினைகள் அன்று இல்லை. எல்லாவற்றையும்விட அந்த காலகட்டங்களில் மோடி, மாநில அரசியலில் கோலோச்சிக்கொண்டிருந்தார். சபர்மதி நதி புனரமைப்புத் திட்டம், சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தியிருந்தார். ஆனால், மோடி பிரதமரான பின்பு குஜராத்தில் பாஜக பலவீனம் அடைய தொடங்கிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மோடியின் செல்வாக்கில் 10 சதவீதம் கொண்ட தலைவர்கூட இன்று குஜராத்தில் இல்லை. மாநிலத்தின் கல்வி அமைச்சராக இருந்தவரை சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஆனந்தி பென், மக்களிடம் ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்தார். ஆனால், அவர் முதல்வராக நியமிக்கப்பட்ட பின்பு அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் மக்களின் அதிருப்தியை பெற்றார். அடுத்து வந்த முதல்வரான விஜய் ரூபானியை மோடியின் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ என்றே மக்கள் நினைக்கிறார்கள். அமித் ஷாவுக்கு கட்சியினரிடம் மட்டுமே செல்வாக்கு இருக்கிறது. மக்களுக்கு அவரிடம் ஈர்ப்பு கிடையாது. அதனாலேயே முதல்முறையாக குஜராத்தில் மோடிக்கு மட்டும் 50 பொதுக்கூட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மோடி பிரதமராக இருப்பதால் ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினைகளையும் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகள் கோத்துவிடுகின்றன. இவை எல்லாம் குஜராத்தில் பாஜக-வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதால் பாஜக திட்டமிட்டது போல் 150 + சாத்தியம் இல்லை...” என்கிறார்கள்.
பயமே பாஜகவின் பலம்
அதேசமயம் குஜராத்தில் கட்டமைப்பு ரீதியாக பாஜக கட்சி உறுதியாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். “சங்பரிவார் அமைப்புகள் பாஜக-வின் தூண்களாக இருக்கின்றன. அந்த அமைப்புகளின் தொண்டர்கள் மற்றும் ஆதரவான மக்களின் ஓட்டுகள் பாஜக-விடம் இருந்து பிரிந்து செல்லாது. தவிர, ஆறு மாதங்களுக்கு முன்பே மாநிலத்தின் 50,128 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் வேலைகளை திட்டமிட்டு பாஜக செய்துவருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே 25 லட்சம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உட்பட ஏராளமான சலுகைகளை மாநில அரசு அறிவித்தது. மற்றொரு முக்கியமான விஷயம், கடந்த 20 ஆண்டுகளாக பாஜக-வினர் மக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் கடுமையான பயத்தை விதைத்துவிட்டார்கள்.பாஜக தோல்வி அடைந்தால் தங்கள் இயல்பு வாழ்க்கையும் வணிகமும் பாதிக்கப்படும் என்று பயப்படுகிறார்கள். இது பாஜக-வுக்கு சாதகம்” என்கிறார்கள்.
‘தி இந்து’-விடம் பேசிய மாநில பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் ஹர்ஷத் படேல், “வளர்ச்சியை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்கிறோம். அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிதான் குஜராத்தில் பாஜக-வின் நோக்கம். மோடி மட்டுமே எங்கள் தலைவரா என்று கேட்டால் ‘ஆமாம்’ என்றுதான் சொல்வோம். அவர் வார்த்தைதான் எங்களுக்கு வேதம். குஜராத் என்கிற வளர்ச்சி அடைந்த மாநிலம் அவர் மட்டுமே உருவாக்கிய ஒன்று. 150-க்கும் அதிகமான தொகுதிகளில் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது...” என்கிறார்.
மோடியைத் தவிர வேறு தலைவர்கள் பிரதானப்படுத்தப்படவில்லையே தவிர, பாஜக-வின் நிர்வாகிகள் கட்டுப்பாட்டுடன் தேர்தல் களத்தில் வேலை பார்க்கிறார்கள் என்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago