ஆடிக்கு முன்பு குழந்தை பெற ஆசை: ஒரே நாளில் 10 பேருக்கு சிசேரியன்: சென்னை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாதனை

ஆடி மாதம் பிறக்கும் முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்ப்பிணிகள் பலர் விருப்பம் தெரிவித்ததையடுத்து, நந்திவரத்தில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 16-ம் தேதி ஒரே நாளில் 10 பெண்களுக்கு சிசேரியன் செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில் 5 பேருக்கு குடும்பக் கட்டுப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 30 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் (தரம் உயர்த்தப்பட்டது) செயல்படுகிறது. இங்கு சுகப்பிரசவம் தவிர தினமும் சிசேரியன் மூலமாக 3 அல்லது 4 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் கடந்த 16-ம் தேதி (புதன்கிழமை) மட்டும் ஒரே நாளில் 10 சிசேரியன் நடந்துள்ளது.

5 பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு

17-ம் தேதி ஆடி மாதம் பிறந்துவிடுதால், முன்கூட்டியே குழந்தை பெற்றுக்கொள்ள கர்ப்பிணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால் சிசேரியன் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களில் 5 பெண்கள் குடும்ப கட்டுப்பாடும் செய்துகொண்டனர். பெரிய அளவிலான அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு இணையாக நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 10 சிசேரியன் செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (சைதை சுகாதார மாவட்டம்) ராஜசேகரன் கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகப்பிரசவம், சிசேரியன் செய்வதற்கேற்ற ஆபரேஷன் தியேட்டர், டாக்டர்கள், நர்ஸ்கள் அனைவரும் உள்ளனர். இங்கு தினமும் 2 முதல் 5 சிசேரியன் செய்யப்படுகிறது. நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 16-ம் தேதி ஒரே நாளில் 10 சிசேரியன் செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 10 சிசேரியன் என்பது மாபெரும் சாதனை. மறுநாள் ஆடி மாதம் பிறப்பதால், முன்கூட்டியே குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

சுகப்பிரசவம் ஆகாத கர்ப்பிணிகளுக்கு மட்டுமே சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கிறோம். முதல் பிரசவத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள், அதிக வயதில் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள், உயரம் குறைவாக உள்ளவர்கள் மற்றும் வயிற்றில் குழந்தை இடம் மாறி இருக்கும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால், அவர்களுக்கு சிசேரியன் செய்து குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. சிசேரியன் செய்யப்படும் தேதியை முன்கூட்டியே தெரிவித்து விடுவோம் என்றார்.

ஆடியில் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாதா?

டாக்டர் கலைவாணி கூறும்போது,

‘‘கோவை மாவட்ட மருத்துவமனைகளில் ஆடி மாதத்தில் குழந்தைப் பிறப்பு இருக்காது. ஆடி மாதத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதை சென்னையிலும் ஒரு சில குடும்பத்தில் தள்ளிப்போடுகின்றனர். பிரசவிக்கும் மாதத்தை கணக்கிட்டு தங்களது வசதிக்கேற்ப கருத்தரிப்பது அவரவர் விருப்பம். ஆனால், கருத்தரித்த பிறகு, இயல்பாக எப்போது குழந்தை பிறக்க வேண்டுமோ, அப்போது பெற்றுக்கொள்வதுதான் மருத்துவரீதியாக தாய்க்கும் நல்லது, சேய்க்கும் நல்லது. அப்போதுதான் குழந்தை முழு வளர்ச்சி பெறும். மருத்துவக் காரணங்களின்றி பிரசவத்தை தள்ளிப்போடுவது, முன்கூட்டியே வைத்துக்கொள்வது கூடாது. ஆடி மாதத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற கருத்து தவறானது’’ என்றார்.

ஜோதிடர் ஷெல்வி கூறியதாவது:

புதுமணத் தம்பதி ஆடி மாதத்தில் சேர்ந்திருந்தால், சித்திரையில் கடுமையான வெயில் காலத்தில் குழந்தை பிறக்கும். அதை தவிர்க்கவே, ஆடி மாதத்தில் தம்பதியை பிரித்துவைத்தார்கள். இப்போது பல வீடுகளில் ஏ.சி. இருக்கிறது. சித்திரையில் குழந்தை பிறந்தால்கூட பிரச்சினை இல்லை. ஆனால், ஆடி மாதத்தில் குழந்தை பெறக் கூடாது என்ற தவறான நம்பிக்கை சிலரிடம் உள்ளது. இந்த மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் குழந்தை பிறப்பது நல்லதுதான். இவ்வாறு ஷெல்வி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE