காவிரி நீர் திறப்பு விவகாரம்: ஆக.23-ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கர்நாடக அரசு அழைப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடும் விவகாரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு வலுத்துள்ளதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, “காவிரி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவுள்ளோம். முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அழைக்கப்பட்டுள்ளனர். காவிரி பிரச்சினை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும். கர்நாடகாவில் போதுமான மழை இல்லாத காரணத்தால், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நிலுவை நீரை வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு காவிரி ஆற்றில் 10 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டது. இதற்கு பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, மஜத முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 107.50 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3,067 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15,576 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மைசூரு மாவட்டத்தில், கடல்மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2281.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு1911 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 6,825 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக‌ விநாடிக்கு 22,401 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக விவசாய அமைப்பினர் சனிக்கிழமை ஸ்ரீரங்கப்பட்ணா அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கர்நாடகா மற்றும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய விவசாயிகள், ‘கர்நாடக‌ அணைகளில் போதிய நீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு நீரை திறக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது’ என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பின்னணியில், கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE