ஆதார் எண் இணைப்பு விவகாரம்: ஏர்டெல் செய்த மோசடியும் ஆதார் ஆணைய நடவடிக்கையும்

By நீரை மகேந்திரன்

ஆதார் எண்ணை செல்போனுக்கு இணைத்து விட்டீர்களா என தினசரி பத்து குறுஞ்செய்திகளை அனுப்புகின்றன செல்போன் நிறுவனங்கள். வங்கிக்குச் சென்றால் அங்கும் இதே வேலை. ஆதார் எண்ணை அனைத்து சமூக நலத் திட்டங்களுக்கு இணைப்பதற்கும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆனால் ஆதார் எண்ணை அரசின் திட்டங்களுக்கு இணைப்பது குறித்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன, இவற்றை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

சமீபத்திய விசாரணையில், ஆதார் எண்ணை நலத் திட்டங்களுக்கு இணைப்பதற்கான அரசு விதித்த இறுதி கெடுவை மார்ச் 31 வரை நீடித்து உத்தரவிட்டாலும், வழக்கின் இறுதி முடிவினை அறிவிக்கவில்லை.

இதனால் மத்திய அரசு ஒரே உத்தரவில் ஆதார் இணைப்பு குறித்து அறிவிக்காமல் உள்ளது. ஆனால் ஒவ்வொரு திட்டத்துக்கும் அவசியமாக்கியுள்ளது. சமீபத்தில் விவசாயிகள் உரம் வாங்குவதற்குக்கூட ஆதார் எண் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆதார் என்கிற தனிநபர் விவரங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது என்கிற கேள்வியை தொடர்ந்து பலரும் கேட்டு வருகின்றனர். தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஏர்டெல் சமீபத்தில் செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து செல்போன் நிறுவனங்களுக்கும் மத்திய அரசும், ஆதார் ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது.

அதுபோல வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் இதை செய்து வருகின்றன. ஏர்டெல் பேமண்ட் வங்கியும் செய்கிறது.

ஏர்டெல் பேமண்ட் வங்கி என்பது கிட்டத்தட்ட மொபைல் வாலட் போல, மொபைல் எண்ணே வங்கிக்கணக்கு. ரீசார்ச் செய்வது உள்ளிட்ட வேலைகளை இதில் செய்து கொள்ளலாம். ரூ.1 லட்சம் வரை டெபாசிட் வைக்கலாம். இதற்கு வட்டியும் கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனம் செல்போனுடன் ஆதார் எண், பேமண்ட் பேங்க்- ஆதார் எண் என இந்த இரண்டு நடவடிக்கைகளையும் தனித் தனியாக செய்த வரை பிரச்சினை இல்லை. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இதில்தான் அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளது ஏர்டெல்.

செல்போன் வாடிக்கையாளர்கள் அளிக்கும் ஆதார் எண்ணை பயன்படுத்தி, அவர்கள் அனுமதி இல்லாமலேயே ஏர்டெல் பேமண்ட் வங்கியில் கணக்கை தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் எரிவாயு மானியம் பெறும் 31 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே இப்படி கணக்கை தொடங்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கேஸ் மானியத் தொகைக்காக இவர்கள் அளித்திருக்கும் வழக்கமான வங்கிக் கணக்கிற்கு பதிலாக பேமண்ட் பேங்க் கணக்கை இணைத்துள்ளது.

இது தெரியாமல் மத்திய எண்ணெய் அமைச்சமும் புதிய வங்கிக் கணக்கிற்கு, தேசிய பண பரிவர்த்தனை கழகம் ( National Payments Corporation of India) மூலம் மானியத் தொகையை பரிமாற்றம் செய்துள்ளது.

இதன் மூலம் சுமார் ரூ. 190 கோடி வரை முறைகேடாக ஏர்டெல் பேமென்ட் வங்கிக்குச் சென்றுள்ளது.

மானியத் தொகையை பெறும் பயனாளிகள் வழக்கமான வங்கிக் கணக்கில் பணம் வரவில்லையே என்று ஆராயும்போதுதான் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. இந்த பணத்தை ஏர்டெல் பேமண்ட் வங்கியிலிருந்து எடுக்க முடியாது ரீசார்ஜ் செய்துதான் கழித்துக் கொள்ள வேண்டும் என செய்தி பரவியபோதுதான் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடியை தாமதமாகக் கண்டுபிடித்த ஆதார் ஆணையம் ஏர்டெல் பேமண்ட் பேங்க்- ஆதார் இணைப்பு செய்யக்கூடாது என நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த மோசடிக்காக இடைக்கால அபராதமாக ரூ. 2.5 கோடியை விதித்துள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் தவறு நிகழ்ந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்களின் வழக்கமான வங்கிக் கணக்கில் இந்த தொகையை உடனடியாக வட்டியுடன் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளது.

``வாடிக்கையாளர்களிடமிருந்து ஒன்றிரண்டு புகார் வந்த போதே நாம் உடனடியாக இவற்றை சரிசெய்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவையில் நாம் செய்த தவறு இது`` என்று ஏர்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல் பணியாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.,

இந்த சம்பவத்துக்கு பின்னர் ஏர்டெல் பேமண்ட் வங்கியின் தலைவர் ஷசி அரோரா , தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க ஏர்டெல் பேமண்ட் வங்கியின் சென்னை பிராந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டால், யாரும் பதிலளிக்க தயாராக இல்லை. டெல்லியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று முடித்துக் கொண்டனர்.

ஆனால் சில ஏர்டெல் அதிகாரிகள், முகவர்களிடத்தில் பேசுகையில், இந்த குழப்பம் சில ரீசார்ஜ் முகவர்களால்தான் உருவானது. ஒருவேளை இந்த வாடிக்கையாளர்கள் அவர்களை அணுகியபோது கணக்கில் உள்ள இருப்பை எடுத்துக் கொள்ள அனுமதித்திருந்தால் இவ்வளவு பெரிய சிக்கல் உருவாகி இருக்காது. வங்கிக் கணக்கே இல்லாத பல கிராமபுற மக்களுக்கு ஏர்டெல் பேமண்ட் வங்கிக் கணக்குதான் முதல் வங்கிக் கணக்கு என்றனர்.

சம்பந்தப்பட்டவர் ஒரு தேவைக்காக அளிக்கும் தனிநபர் விவரங்களுக்கு பாதுகாப்பில்லை என்பதுதான் ஏர்டெல் பேமண்ட் வங்கி மோசடியிலிருந்து தெரியவருவது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ் கூறுகையில்,

ஏர்டெல் மேற்கொண்ட இந்த நடவடிக்கை மூலம் ஆதார் ஆணைய விதிமுறைகளை மீறியுள்ளது தெளிவாகிறது. இதை அந்த நிறுவனமே ஒப்புக் கொள்கிறது. ஒரு நோக்கத்துக்காக பெறப்படும் விவரங்கள் பிற நோக்கங்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் இதன் மூலம் நிரூபணமாகிறது.

ஏர்டெல் நிறுவனம் இதை அறிவித்துவிட்டு செய்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த சம்பவத்தின் மூலம் சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் எதுவும் பெறப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சியானது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற வழக்கு தொடுக்க முடியும். ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவும் செய்யலாம் என்றார்.

வங்கிகள் இனிமேல் மானியக் கணக்கு எண்ணை மாற்றவேண்டும் என்றால் வாடிக்கையாளரின் எழுத்து மூலமான ஒப்புதல் பெற வேண்டும் என ஆதார் ஆணையம் சமீபத்தில் விதிகளை மாற்றி அறிவித்துள்ளது. ஆதார் ஆணையத்தில் தலைவர் அஜய் பூஷன் பாண்டே சமீபத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில் , மிக அதிகபட்ச பாதுகாப்பில் ஆதார் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன என்கிறார். ஆனால் சம்பந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமலேயே ஆதார் எண் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு என்ன பதில் என்று சொல்லவில்லை. ஏர்டெல் விவகாரம் விசாரணையில் உள்ளது என்கிறார்.

ஆதார் விவரங்களின் பாதுகாப்பில் குளறுபடி என்பதற்கு இது ஒரு உதாரணம். சிக்கல்கள் ஒவ்வொன்றாக உருவாகும் முன்பே அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ஏர்டெல் மோசடி உணர்த்தும் உண்மை.

ஆதார் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா..?

ஆதார் கார்டு எங்கெல்லாம், எப்போதெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற விவரத்தினை https://resident.uidai.gov.in/notification-aadhaar என்கிற இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த இணைப்புக்குச் சென்று உங்கள் ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டினை அளிக்க வேண்டும். பிறகு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) பெற கிளிக் செய்யவும். ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.

ஆனால் இந்த இணையதளத்தில் முழு விவரங்களும் கிடைக்காது. உங்கள் ஆதார் எண் யாரால், எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்கிற விவரங்களை பார்க்க முடியாது. தேவையில்லாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சந்தேகம் இருந்தால் அதற்கு லாக் செய்யும் வசதி உள்ளது. அதை பயன்படுத்தலாம்.

தகவல் திரட்டு (பிக் டேட்டா)

சில தொழில்நுட்ப வல்லுநர்கள் இது தொடர்பாக கூறுகையில், ஆதார் தகவல்கள் என்பது தகவல் திரட்டு தொழில்நுட்பத்தின் ஒரு அம்சம்தான். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்படி உலகை மாற்ற உள்ளதோ அதுபோல தகவல் திரட்டும் எதிர்கால உலகை மாற்ற உள்ளது. இதற்கு மிகப் பெரிய சந்தை உள்ளது. சர்வதேச அளவில் சந்தை விரிவடைந்து கொண்டு இருக்கையில் தங்கள் வர்த்தகப் போக்குகளை இந்த தகவல்கள் கொண்டு நிறுவனங்கள் வடிவமைக்க முடியும்.

நீங்கள் கூகுளில் தேடும் விஷயங்களைக் கொண்டு உங்கள் தேவை என்ன என்பதை கூகுள் முடிவு செய்வதும், அது தொடர்பான விளம்பரங்களை உங்கள் ஸ்கீரினில் காட்டுவதும் இந்த தொழில்நுட்பம்தான். இந்தியா மிகப் பெரிய சந்தை. ஏதோ ஒரு வகையில் ஆதார் விவரங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு கிடைத்தால் 120 கோடி வாடிக்கையாளர்கள் கிடைத்ததுபோல. ஏர்டெல் செய்தது இதுதான். தகவல் பகுப்பாய்வாளர் என்கிற வகையில் புதிய வேலைவாய்ப்புகளும் இதன் மூலம் எதிர்காலத்தில் உருவாகும் என்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்