ஜி20 கூட்டங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது பாஜக - காங்கிரஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி20 கூட்டங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜக பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜி20 அமைப்பு 1999-ல் உருவாக்கப்பட்டது. 19 நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இதன் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை 19 நாடுகளில் இதன் உச்சிமாநாடு நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்த உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

ஆனால், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களைப் போன்ற ஒரு சூழ்நிலை இங்கு உருவாக்கப்படுவதைப் போன்று, இதற்கு முன் வேறு எந்த நாட்டிலும் உருவாக்கப்பட்டதில்லை. முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் இவை பயன்படுத்தப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் அணிசேரா உச்சி மாநாட்டை இந்தியா 1983-ல் நடத்தியது. அதன் பிறகு புதுடெல்லியில் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டையும் இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. அப்போதைய அரசாங்கம், அவற்றை தேர்தல் லாபத்திற்காகப் பயன்படுத்தவில்லை.

நரேந்திர மோடி ஒரு சிறந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்று 2014, ஏப்ரல் 5-ம் தேதி அத்வானி கூறியது நினைவுக்கு வருகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்ப பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதில் மட்டுமே பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார்" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதத்துக்கு மேலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் உள்ளன. ஜி20 குழுவின் தற்போதைய தலைவராக உள்ள இந்தியா, இந்த அமைப்பின் உச்சி மாநாட்டை அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபம் அரங்கில் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE