உதான் திட்டம் 93% வழித்தடங்களில் செயல்படவில்லை என்கிறது சிஏஜி அறிக்கை: கார்கே குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உள்நாட்டு விமான சேவையை விரிவுபடுத்தும் உதான் திட்டம் 93% வழித்தடங்களில் செயல்படவில்லை என்று கணக்குத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் சிறு நகரங்களுக்கும் விமான சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் கடந்த 2016, அக்டோபர் 21-ம் தேதி உதான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைகளும் விமானங்களில் பயணிக்கும் வகையில் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில் இத்திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டம் 93% வழித்தடங்களில் செயல்படவில்லை என சிஏஜி (CAG) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "செருப்பு அணிபவர்களும் விமானங்களில் பயணிக்கும் திட்டம் என கூறி அறிமுகப்படுத்தப்பட்ட உதான் திட்டம், மோடி அரசின் மற்ற வாக்குறுதிகளைப் போலவே நிறைவேறாத திட்டமாக உள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. சிஏஜி அறிக்கை சொல்கிறது. உதான் திட்டம் 93% வழித்தடங்களில் செயல்படவில்லை. இது தொடர்பாக நடைபெற வேண்டிய சுய தணிக்கை, விமான நிறுவனங்களால் இதுவரை செய்யப்படவில்லை. மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் சேவைகளும் முடங்கியுள்ளன" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "உதான் திட்டம் மக்களுக்குக் கிடைக்கவில்லை. வெறும் பொய்களையும் வார்த்தை ஜாலங்களையுமே ஆட்சியாளர்கள் பேசுகிறார்கள். இதுபோன்ற திறமையற்ற அரசை இந்தியா மன்னிக்காது" என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்களில் 'மோசடி' நடந்திருப்பதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்; குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா சுப்ரியா ஷ்ரினேட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, துவாரகா விரைவுச் சாலை செலவு தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிராகரித்துள்ளார். அதன் விவரம்: துவாரகா விரைவுச் சாலை செலவு விவகாரம்: சிஏஜி அறிக்கையும், நிதின் கட்கரி விளக்கமும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE