அமேதியில் ராகுல் காந்தி Vs ஸ்மிருதி இரானி: காங்கிரஸ் - பாஜக இடையே தொடங்கிய வார்த்தைப் போர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அஜய் ராய் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.

அஜய் ராயின் இந்தப் பேச்சு குறித்து பாஜகவைச் சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "காங்கிரஸ் கட்சி அமேதி தொகுதியை தங்களது தனிச்சொத்து போல கருதி மக்களை சுவிங்கம் போல் மெல்கிறது. மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

இதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஷித் அல்வி பதிலடி கொடுக்கும் விதமாக கூறுகையில், "ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டால் ஸ்மிருதி இரானி தனது டெபாசிட் தொகையைக் கூட இழப்பார். அவர் அமேதி தொகுதியை விட்டே ஓடவும் கூடும். அவரை அவ்வாறு ஓட விடவேண்டாம் என்று நான் பாஜகவிடம் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டால் பிரதமர் நரேந்திர மோடி தொகுதியை விட்டுச் செல்ல வேண்டியது இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியைத் தழுவியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அஜய் ராய் வாரணாசியில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது பேசிய அவர், “வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார். அது கட்சித் தொண்டர்கள் மற்றும் தொகுதி மக்களின் விருப்பம். காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தங்களுக்குள்ள வேறுபாடுகளை களைந்துவிட்டு ராகுல் காந்தி அமேதியில் வெற்றி பெற உழைக்க வேண்டும். பிரியங்கா காந்தியை சிறந்த தலைவராக நிலைநிறுத்த வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் கோரிக்கை. எங்கிருந்து போட்டியிட வேண்டும் என்பது அவர்களின் (சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி) விருப்பம். அவர்களை வெற்றி பெற வைக்க எங்களின் ஆகச் சிறந்த உழைப்பினை வெளிப்படுத்துவோம்" என்றார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட்ட அஜய் ராய் தோல்வியடைந்திருந்தார். வரும் தேர்தலில் வாரணாசியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, "நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன். மற்ற விஷயங்களை கட்சியின் தலைமை மற்றும் இண்டியா கூட்டணி முடிவு செய்யும்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE