‘துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்கிறேன்’ - அசாம் அரசு உயர் பதவியை துறந்த பாஜக மூத்த தலைவர்

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: அசாம் மாநிலம் நாகோன் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தான் வகித்து வந்த அசாம் உணவு மற்றும் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தலைவர் பதவியை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜன் கோஹைன் ராஜினாமா செய்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் பாஜக அந்தத் தொகுதியில் வெற்றி பெற இயலாது என்றும் தெரிவித்துள்ளார். இவர் அந்தத் தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: "சமீபத்தில் நடந்த நாகோன் தொகுதி மறுவரையறை, எதிர்காலத்தில் அத்தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அதேபோல் மக்கள் தொகை மாற்றம் தொகுதி மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து உங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும் எனது கவலைகள், அதிருப்திகள் எந்த விதமான பயனையும் தரவில்லை என்று நாகோன் தொகுதியின் தற்போதைய மாற்றம் தெரிவிக்கிறது.

அடுத்த நாளே நான் அதைச் செய்தேன். ஆனாலும், அதனால் எந்தவிதமான நேர்மறை விளைவுகளும் ஏற்படவில்லை. கட்சியின் நம்மைக்காக என்னைப் போன்ற மூத்த தலைவர்களின் கவலைகள் சொந்தக் கட்சியாலேயே கேட்கப்படாமல் இருப்பது துரோகமாகவும் அவமானமாகவும் உணருகிறேன். இதன்விளைவாக கேபினட் அந்தஸ்து உடைய மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளாக நான் கட்சிக்கு விசுவாசமானமான தொண்டனாக இருந்திருக்கிறேன். நாகோன் மக்களவைத் தொகுதியில் தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றி பெற்று, 20 ஆண்டு காலம் தொகுதி மக்களுக்காக பணியாற்றியுள்ளேன். இந்த விஷயத்தில் எனது அனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனது மக்களின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு குறித்த எனது கவலைக்கு மதிப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று ராஜன் கோஹைன் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் கோஹைன், "சமீபத்தில் நடந்த தொகுதி மறுவரையறை என்பது பழங்குடி மக்களுக்கு மிகவும் சரியானது மற்றும் பாதுகாப்பானது. ஆனால், நாகோன் மக்களவைத் தொகுதி எதிர்க்கட்சிகளுக்கான பரிசு” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE