கோட்டா தற்கொலை சம்பவங்கள் | பயிற்சி மையங்கள் குற்றம் புரிகின்றன - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி - ஜெஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பலர் கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துவரும் சூழலில் இது தொடர்பான விசாரணைக்கு முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

தற்கொலை புள்ளிவிவரங்கள்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படிப்பதுண்டு.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டுவந்த 18 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது இந்த ஆகஸ்ட் தொடங்கியதிலிருந்து 4-வது தற்கொலை சம்பவமாகும். 2023 தொடங்கியதிலிருந்து இதுபோல் பயிற்சி மாணவர்கள் 21 பேர் தற்கொலையால் இறந்துள்ளனர். கோட்டா மாவட்ட நிர்வாகத்தில் பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கோட்டாவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து சராசரியாக மாதத்துக்கு 3 தற்கொலைகள் என்ற வீதத்தில் நடைபெறுகிறது எனத் தெரியவந்துள்ளது.

முதல்வர் ஆலோசனை: இந்த தற்கொலைகள் தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் வருத்தம் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு குழு அமைத்து தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கெலாட், "கோட்டா தற்கொலைகள் தொடர்பாக விசாரணைக் குழு அமைத்துள்ளோம். அந்தக் குழு 15 நாட்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக படிப்புச் சுமை கொடுக்கப்படுகிறது. 9 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு மாணவர்களை இதுபோன்ற நுழைத்தேர்வு பயிற்சிகளில் சேர்ப்பது தனியார் பயிற்சி மையங்கள் செய்யும் குற்றச்செயலாகும். இதில் பெற்றோரின் தவறும் இருக்கிறது. மாணவர்கள் பள்ளியின் பொதுத் தேர்விலும் தேற வேண்டும். இது அவர்களுக்கு அழுத்தத்தைத் தருகிறது. அதனால் சில குழந்தைகள் செய்வதறியாது தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு குழந்தையின் இழப்பு பெற்றோருக்கு பேரிழப்பு. அதேபோல் அரசாங்கமும் இளம் சிறார்கள் இப்படியாக தற்கொலையால் இறப்பதை அனுமதிக்க முடியாது. இது நடவடிக்கைக்கான தருணம்" என்றார்.

ஸ்பிரிங் மின்விசிறிகள்: இதனிடையே, தற்கொலையை தடுக்கும் வகையில் கல்லூரி விடுதிகளில் ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மனநல ஆலோசனை: மாணவர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்துவரும் சூழலில் கோட்டா மாவட்ட ஆட்சியர் ஓபி புங்கார் கூறுகையில், "மாணவர்களின் மனநலனைக் கண்காணிக்கும் வகையில் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மனநல சோதனை தேர்வுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்படும். அதன் அடிப்படையில் மன அழுத்தம் அதிகம் உள்ள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE