குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்துவின் உயிரை காக்க உதவிய முஸ்லிம்கள்: கேரளாவில் மத நல்லிணக்க நெகிழ்ச்சி சம்பவம்

By என்.சுவாமிநாதன்

தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த அர்ஜுனன் ஆதிமுத்துவும் (45), கேரளாவின் மலப்புரம் அருகே உள்ள ஹரிஞ்சாபாடி பகுதியை சேர்ந்த அப்துல் வாஜீதும் குவைத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் வாஜீதை 2013-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி கொலை செய்ததாக அர்ஜுனன் ஆதிமுத்து கைது செய்யப்பட்டார். மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார் அர்ஜுனன் ஆதிமுத்து.

குவைத் நாட்டு சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால், கொலை செய்தவர் விடுதலை செய்யப்படுவார். இதுகுறித்து தெரிந்ததும், அர்ஜுனன் ஆதிமுத்துவின் மனைவி மாலதி, தனது 14 வயது மகள் பூஜாவுடன் கேரளா சென்றார்.

மாலதி, தன் குடும்பம் ஏழ்மையில் இருப்பதையும், பெண் பிள்ளை இருப்பதையும் சுட்டிக்காட்டி, தன் கணவருக்கு மன்னிப்பு வழங்கி குடும்பத்தை வாழ வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கேரள நிர்வாகி காதர் மொகைதீனுக்கு தெரிய வந்தது. அவர் உயிர் இழந்த அப்துல் வாஜீத்தின் குடும்பத்திற்கு தெரியப்படுத்தவே, மன்னிப்பு வழங்க சம்மதித்தனர். அதேநேரத்தில் அப்துல் வாஜீத்தின் மரணத்தினால் அவர் குடும்பமும் வாழ்வாதாரம் இழந்துள்ளது. வாஜீத்தின் மனைவி, தன் மகள்களுடன் வாடகை வீட்டில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரப்பட்டது.

சொந்தபந்தங்களை நாடியும், வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்தும் கூட ரூ.5 லட்சத்துக்கு மேல் அர்ஜுனன் மனைவி மாலதியால் புரட்ட முடியவில்லை. பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிகாப்தங்கலின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த முனவர் அலி ஷிகாப்தங்கல் பணம் திரட்டும் முயற்சியை முன்னெடுத்தார். சகரான் குரூப், பெங்களூரில் உள்ள என்.ஏ.ஹரீஸ் பவுண்டேஷன், வளைகுடா நாட்டில் உள்ள ஏ.எம்.பி பவுண்டேஷன், சலீம் மணி எக்ஸ்சேன்ஞ், ஸ்டெர்லின் இண்டர்நேஷனல் உள்ளிட்ட பல முஸ்லிம் முதலாளிகளால் நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்களும் நேசக்கரம் நீட்டின. ஒரே நாளில் இவற்றின் மூலம் ரூ.25 லட்சம் நிதி குவிந்து அந்த தொகை மாலதியிடம் கொடுக்கப்பட்டது.

மாலதி, தனது தந்தை துரைராஜூ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடன் சென்று ரூ.30 லட்சத்தை அப்துல் வாஜீத்தின் குடும்பத்துக்கு கொடுத்தார். வாஜீத் குடும்பத்தின் சார்பில் அர்ஜுனன் ஆதிமுத்துவை மன்னிப்பதற்கான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதம் இந்திய தூதரகத்தின் வழியாக, குவைத் நாட்டிற்கு சென்றுள்ளது. அதன் அடிப்படையில் அர்ஜுனன் ஆதிமுத்து விரைவில் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்