“படித்தவருக்கு வாக்களிக்கச் சொல்வது குற்றமா?” - ‘அன் அகாடமி’ ஆசிரியர் நீக்கம் குறித்து கேஜ்ரிவால் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "படித்த வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொல்வது குற்றமா?" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இ-கற்றல் தளமான அன்அகாடமி, அதன் ஆசிரியர்களில் ஒருவர், படித்த வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொல்லி தனது மாணவர்களிடம் கூறியதற்காக அவரை பணிநீக்கம் செய்தது குறித்து இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இ-கற்றல் தளமான அன்அகாடமியில் வேலை செய்து வந்தவர் கரண் சங்வான். இவர் தனது மாணவர்களிடம், ‘வெறும் பெயர்களை மாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்; அதற்கு பதிலாக நன்கு படித்த, சிறந்த கல்வி பின்னணியுள்ள வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்’ என்று பேசியிருந்த வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அன்அகாடமி நிறுவனம், கரண் சங்வானை பணியிலிருந்து நீக்கியது. இது தொடர்பாக அக்கல்வி நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "வகுப்பறை என்பது தனிப்பட்ட கருத்துகள் மற்றும் பார்வைகளை பகிர்ந்து கொள்வதற்கான இடம் இல்லை. அது மாணவர்களை தவறாக வழிநடத்தவும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், "படித்த வேட்பாளருக்கு வாக்களிக்க சொல்வது குற்றமா? படிப்பறிவில்லாமல் ஒருவர் இருந்தால் தனிப்பட்ட முறையில் அவரை நான் மதிக்கிறேன். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் கல்வியறிவற்றவர்களாக இருக்க முடியாது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் யுகம். கல்வியறிவற்ற மக்கள் பிரதிநிதிகளால் 21ம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கல்விப் பின்னணி பற்றி கேள்வி எழுப்பியிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கராக்பூரில் உள்ள ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். பின்னர் அவர் குடிமை பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 1995-ம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் (ஐஆர்எஸ்) வருமான வரித் துறை உதவி ஆணையராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பணிநீக்கத்துக்கு உள்ளாகியிருக்கும் கரண் சங்வான் தனது யூடியூப் தளத்தில், "சமீப நாட்களாக வைரலாகி வரும் ஒரு வீடியோவல் நான் சர்ச்சைகளுக்குள் சிக்கியிருக்கிறேன். அந்தச் சர்ச்சைகளால் நீதித் துறை தேர்வுக்கு தயாராகி வரும் எனது மாணவர்கள் பலரும் பல விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. அவர்களுடன் நானும் பல விளைவுகளைச் சந்தித்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த சர்ச்சைகள் குறித்த விபரங்களை ஆக.19-ம் தேதி (சனிக்கிழமை) வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

பேசியது என்ன? - தனது மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் சமயத்தில், ஐபிசி, சிஆர்பிசி, இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவைகளின் காலனிய காலத்து பெயர்களை மாற்றும் குறித்து பேசிய கரண் சங்வான், இதனால் குற்றவியல் சட்டம் குறித்து தான் எடுத்த பாடக்குறிப்புகள் வீணாகிவிட்டதாக வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். எக்ஸ் தளத்தில் வைரலான சர்ச்சைக்குரிய வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: "எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. என்னிடம், நான் பாடத்துக்காக தயார் செய்த அநேக சட்டங்கள், வழக்குகள் மற்றும் படக்குறிப்புகள் உள்ளன. இதனைத் தயாரிப்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் கடினமான ஒன்று. உங்களுக்கும் வேலை கிடைக்கலாம்.

ஆனால், ஒன்றை மனதில் வைத்துக்கெள்ளுங்கள். அடுத்த முறை வாக்களிக்கும் போது நன்றாக படித்த ஒருவருக்கு வாக்களியுங்கள். அப்படிச் செய்யும்போது இது போன்ற சோதனைகளை நீங்கள் மறுமுறை சந்திக்க வேண்டியது இருக்காது. பெயர் மாற்றங்கள் ஆர்வம் காட்டும் தேர்ந்தெடுப்பதுக்கு பதிலாக, விஷயங்களை புரிந்து கொள்ளக்கூடிய படித்தவர்களைத் தேர்ந்தெடுங்கள். சரியாக முடிவெடுங்கள்" என்று அவர் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE