ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொல்கத்தாவில் நேற்று தொடங்கிவைத்தார்.

உலகின் வலுவான கடற்படையை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா 2-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் இருக்கிறது.

சீனாவிடம் தற்போது 350 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உள்ளன. இந்தியாவிடம் 137 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் மட்டுமே உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக ‘புராஜக்ட் 17ஏ' என்ற திட்டத்தின் கீழ் ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் தாராகிரி, ஐஎன்எஸ் மகேந்திரகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி, ஐஎன்எஸ் துனாகிரி, ஐஎன்எஸ் விந்தியகிரி ஆகிய 7 போர்க்கப்பல்களை தயாரிக்கும் பணி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இதில் நீலகிரி, உதயகிரி, தாராகிரி, ஹிம்கிரி, துனாகிரி ஆகிய 5 போர்க்கப்பல்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன. இவை தற்போது பல்வேறு வகைகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. வரும் 2024, 2025-ம் ஆண்டுகளில் 5 போர்க்கப்பல்களும் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.

‘புராஜக்ட் 17ஏ' திட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று தொடங்கிவைத்தார். கொல்கத்தாவில் நடந்த விழாவில் ஆளுநர் ஆனந்தா போஸ், முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

6,670 டன் எடை: கர்நாடகாவில் உள்ள மலையின் பெயர் (விந்தியகிரி), போர்க்கப்பலுக்கு சூட்டப்பட்டு இருக்கிறது. 6,670 டன் எடை, 488 அடி நீளம், 59 அடி அகலம் கொண்ட இந்த போர்க்கப்பலில் மின்சார, டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் 35 அதிகாரிகளும் 226 வீரர்களும் பணியாற்ற உள்ளனர்.

2026-ல் கடற்படையில் இணைப்பு: நீர்மூழ்கிகளை அழிக்கும் ஏவுகணைகள், எதிரி போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்களை தாக்கி தகர்க்கும் ஏவுகணைகள் கப்பலில் பொருத்தப்பட்டு உள்ளன. ரேடார் மற்றும் நீர்மூழ்கிகளை கண்டறியும் கருவிகளும் நிறுவப்பட்டு உள்ளன. 2 ஹெலிகாப்டர்களையும் கப்பலில் நிறுத்த முடியும். இவை தவிர அதிநவீன பிரம்மோஸ், பாரக் 8 ரக ஏவுகணைகளையும் கப்பலில் பொருத்த முடியும். பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்தபோர்க்கப்பல் வரும் 2026-ம் ஆண்டில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE