மணிப்பூர் குறித்து டெல்லி சட்டப்பேரவையில் கேஜ்ரிவால் பேச்சு - பாஜக எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசிய நிலையில், பாஜக உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மணிப்பூரில் மைத்தி மற்றும் குகி சமூக மக்களுக்கு இடையேயான மோதல் காரணமாக, அம்மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார். அதற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூர் விவகாரம் குறித்து பேசக் கூடாது என்றும், டெல்லியில் உள்ள பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட அமளியை அடுத்து, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர் அவைக் காவலர்களால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.

இதையடுத்து அவையில் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், "மணிப்பூர் பிரச்சினையில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என பாஜக எம்எல்ஏக்கள் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். இதே செய்தியைத்தான் பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே அவர் மணிப்பூர் விவகாரத்தில் அமைதி காக்கிறார். அம்மாநிலத்தில் நேரிட்ட வன்முறை காரணமாக 6,500 முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகி உள்ளன. 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனைக்குப் பிறகும் பிரதமர் மோடி அமைதி காக்கிறார்" என குற்றம்சாட்டினார்.

அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ ராம்வீர் சிங் பிதூரி, "டெல்லி சட்டப்பேரவையில் டெல்லி விவகாரம் குறித்து மட்டுமே பேச வேண்டும். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுவிட்டது. டெல்லியில் உள்ள பிரச்சினைகள் குறித்து நாங்கள் பேசினால், அவர்கள் விவாதத்தில் பங்கேற்காமல் ஓடுகிறார்கள். அவைக் காவலர்களைக் கொண்டு எங்களை வெளியேற்றுகிறார்கள்.

டெல்லியில் சாலைகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. காற்று மாசு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவை குறித்தும், டெல்லி அரசு போக்குவரத்துப் பேருந்துகளின் நிலை, பள்ளிகளின் நிலை குறித்தும், அரசின் ஊழல் குறித்தும் பேச விடாமல் ஆட்சியாளர்கள் தடுக்கிறார்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குகிறது" என குற்றம்சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE