“திமுகவை திருப்திப்படுத்த...” - காவிரி பிரச்சினையில் கர்நாடக காங். அரசு மீது பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பெங்களுரூ: தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆளும் காங்கிரஸ் அரசு தனது கூட்டணி கட்சியான திமுகவை தாஜா செய்வதற்காக காவிரியில் நீர் திறப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் காவிரியில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் இந்தக் குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.

இது குறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில், "விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்பட்டு கூட்டணிக் கட்சியான திமுகவை திருப்தி படுத்துவதுக்காக ஆளும் காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்து விடுகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாது என்று முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், துணை முதல்வர் 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கர்நாடகாவின் தேவைகளை முன்னிறுத்தி அதன் நலன்களை வலியுறுத்தி மாநிலத்தில் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதல்வர் பொம்மை கடிதம் எழுதியிருந்தார்.

இதனிடையே, தண்ணீர் திறப்பது குறித்து பேசிய கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், "தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசு கடிதம் எழுதவேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் இருக்கும்போது நாங்கள் திறந்து விடுவோம். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையிலும், நாங்கள் 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட இருக்கிறோம். எங்களுடைய முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. அவர்களின் தண்ணீர் தேவை 27 டிஎம்சி, ஆனால் எங்களால் அவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE