மணிப்பூர் பற்றி எரியும்போது தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தீவிரம் காட்டுகிறது: கார்கே சாடல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது; ஆனால், பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மல்லிகார்ஜுன் கார்கே பேசியது: "மணிப்பூருக்கு ராகுல் காந்தியால் செல்ல முடிகிறது எனும்போது, பிரதமர் மோடியால் ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூரில் வாழும் பெண்களுக்கு பாஜக என்ன பாதுகாப்பை கொடுத்துள்ளது? அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பலர் கொல்லப்படுகிறார்கள். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், பாஜக மற்ற மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருகிறது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அவர் கேட்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாம் கொண்டு வந்த பிறகே மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசினார். மணிப்பூரில் நேரிட்ட வன்முறை காரணமாக ஏராளமான உயிர்களை நாம் இழந்துவிட்டோம்; ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டன; ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மகளிர் அணியினர் விவாதிக்க வேண்டும்; வியூகம் வகுக்க வேண்டும். இந்தத் தேர்தல் பணி என்பது நாட்டு மக்களுக்கானது. இந்தத் தேர்தல் போட்டி தனிப்பட்ட நபர்களுக்கானது அல்ல. நரேந்திர மோடியை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கான உறுதியை மகளிர் அணியினர் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் நலனுக்காக நாம் நமது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று நரேந்திர மோடி தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார். இந்த 70 ஆண்டுகளில், மொரார்ஜி தேசாய், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரும் பிரதமராக இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் அவருக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இந்த நாட்டில் ஜனநாயகத்தை 70 ஆண்டுகளாக நாம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். இதற்காக காங்கிரஸ் கட்சி அளித்துள்ள பங்களிப்பு மகத்தானது" என்று மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார்.

இதனிடையே, மணிப்பூரில் பழங்குடிகள் வசிக்கும் மாவட்டங்களுக்கு தனியாக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு குகி ஸோ எம்எல்ஏக்கள் 10 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதன் விவரம்: “மணிப்பூரில் பழங்குடி மாவட்டங்களுக்கு தனி உயர் அதிகாரிகள் தேவை” - பிரதமருக்கு குகி எம்எல்ஏக்கள் கடிதம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE