“விஸ்வகர்மா திட்டம் குறித்து சில பகுதிகளில் சில கருத்துகள் நிலவலாம். ஆனால்...” - நிர்மலா சீதாராமன் விளக்கம்

By செய்திப்பிரிவு

ரகுராஜ்பூர் (ஒடிசா): சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த விஸ்வகர்மா திட்டம் அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வண்ண ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ்பூருக்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். பட்ஜெட்டில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம். இந்தத் திட்டம் குறித்து சில பகுதிகளில் சில கருத்துகள் நிலவலாம். ஆனால், இந்தியாவின் கைவினைத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய, நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம்.

அற்புதமான கற்சிலைகளை வடிப்பவர்களாக இருக்கலாம், ஓவியங்களை வரைபவர்களாக இருக்கலாம், பனை ஓலைகளைக் கொண்டு அழகழகான பொருட்களை உருவாக்குபவர்களாக இருக்கலாம். இத்தகையவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். ஏனெனில், நமது நாட்டின் மென்திறன் (soft skills) இத்தகைய கைவினைக் கலைஞர்களிடம் இருக்கிறது. நாட்டின் கலாசாரப் பாரம்பரியத்தை அவர்கள்தான் தங்கள் தோல்களில் சுமக்கிறார்கள். அவர்களுக்கு துணைபுரியக் கூடிய விஸ்வகர்மா திட்டம் அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்கப்படும். அந்த வகையில் ரகுராஜ்பூருக்கு வந்திருப்பது பெருமிதம் அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்தத் திட்டம் குறித்து நேற்று முன்தினம் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டம் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். நெசவாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள், கருவிகள் செய்யக்கூடியவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்தம் செய்பவர்கள் முதலானோரின் குடும்பங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்படும். ரூ.13 ஆயிரம் கோடி முதல் ரூ.15 ஆயிரம் கோடி வரையிலான மதிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

18 தொழில் கலைஞர்கள்: விஸ்வகர்மா ஜெயந்தியான செப்டம்பர் 17-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. தச்சு வேலை, படகு தயாரிப்பு, இரும்புக் கொல்லர், ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு, பொற்கொல்லர், மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர், கொத்தனார், கூடை - பாய் - துடைப்பம் - தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர், பொம்மை கலைஞர்கள், முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர், மீன்பிடி வலை தயாரித்தல் ஆகிய 18 வகையான பாரம்பரிய தொழில்களை பாரம்பரியமாக அல்லது குரு-சிஷ்ய முறைப்படி மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தேவையான உதவிகளை பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் வழங்கும்.

இவர்களுக்கு இத்திட்டம் மூலம் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டையுடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை 5 சதவீத தள்ளுபடி வட்டியில் கடன் உதவி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் திறன்களையும் அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE