சந்திரயான்-3 | விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்

By செய்திப்பிரிவு

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவின் சுற்றுப் பாதையில் பயணித்து வருகிறது. வரும் 23-ம் தேதி லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வுப் பணியை மேற்கொள்ள உள்ளது.

இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.15 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டர் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுக்கு 153 x 163 கி.மீ. தொலைவில் ரோவர் பயணித்து வருகிறது. படிப்படியாக இதன் உயரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 23-ம் தேதி லேண்டர் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியில் இதை தரையிறக்க உள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

நிலவை நோக்கிய சந்திரயான்-3 பயணம்: சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபாயில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவுக்கு மிக அருகில் சுற்றுப்பாதையில் லேண்டர் பயணித்து வருகிறது. 23-ம் தேதி லேண்டரை சாஃப்ட் லேண்டிங் செய்ய உள்ளனர் விஞ்ஞானிகள். நிலவில் நீர் ஆதாரம் உட்பட பல்வேறு ஆய்வு பணிகளை இதன் ரோவர் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE