இமாச்சல், உத்தராகண்ட் கனமழை, நிலச்சரிவுக்கு இதுவரை 81 பேர் பலி; பஞ்சாபிலும் திடீர் வெள்ளம்

By செய்திப்பிரிவு

சிம்லா: இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இதுவரை 81 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு: இமாச்சலில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) ஒன்கர் சந்த் சர்மா கூறுகையில், "கடந்த மூன்று தினங்களில் 71 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மொத்தம் 57 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன" என்றார். இமாச்சலப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் சிம்லா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சம்மர் ஹில், ஃபாகி மற்றும் கிருஷ்ணாநகர் ஆகிய மூன்று பகுதிகள் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சல் மாநிலத்தின் அவசர கால செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, கடந்த ஜூன் 24-ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து மழைத் தொடர்பான சம்பவங்களால் இதுவரை 214 பேர் உயிரிழந்தனர்; 38 பேர் காணாமல் போய் உள்ளனர்.

சிம்லா மாவட்டத்தின் துணை ஆணையர் ஆதித்ய நேகி கூறுகையில், "சம்மர் ஹில் மற்றும் கிருஷ்ணாநகர் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்மர் ஹில் பகுதியில் இருந்து 13 உடல்களும், ஃபாஹி பகுதியில் 5 உடல்களும், கிருஷ்ணா நகர் பகுதியில் 2 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சம்மர் ஹில் சிவன் கோயிலின் அடியில் சில உடல்கள் சிக்கியிருக்கலாம். தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக கிருஷ்ணாநகரில் உள்ள 15 வீடுகளில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் தீவிரம்: கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நகரின் துணைப் பகுதிகளான இண்டோரா மற்றும் ஃபாட்பூரில் இருந்து 1,731 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் அனைத்தும் விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உதவியுடன் நடந்து வருகிறது" என்று இணை ஆணையர் நிபுன் ஜிந்தால் தெரிவித்தார்.

இதனிடையே, இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பருவமழை காலத்தின் சராசரி மழையளவு 730 மி.மீ. ஆனால், கடந்த 54 நாட்களில் ஏற்கெனவே 742 மி.மீ மழை பெய்துவிட்டது என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டில் 10 பேர் பலி: உத்தராகண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் லக்‌ஷ்மண் ஜுலா பகுதியில் தங்கும் விடுதி ஒன்றின் இடிபாடுகளில் இருந்து ஒரு தம்பதி, அவர்களது மகன் உட்பட நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. செவ்வாய்க்கிழமையில் இரண்டு உடல்களும், புதன்கிழமையில் இரண்டு உடல்களும் மீட்கப்பட்டிருப்பதாக பவுரியில் உள்ள எஸ்எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உத்தராகண்டில் மழை தொடர்பான சம்பவங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

பவுரி - கோட்வார் - துகாடா தேசிய நெடுஞ்சாலையில் ஆம்சூர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதேபோல், ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை பிபால்கோடி பரேன்பானிக்கு அருகில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு போக்குவரத்து தடைபட்டுள்ளதாக மாநில பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பஞ்சாபில் திடீர் வெள்ளம்: பஞ்சாப் மாநிலத்தில் போங் மற்றும் பக்ரா அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் பஞ்சாப் மாநிலத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் ஹோசியார்பூர், குர்தாஸ்பூர் மற்றும் ரூப்நகர் பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. மாநில அரசு நிலைமையைத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, பக்ரா மற்றும் பாக் அணைகளின் நீர்மட்டம் முறையே 1,677 அடி மற்றும் 1,398 அடியாக இருப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்