சத்தீஸ்கர் மாநிலத்தில் முதன்முறையாக மாவோயிஸ்டு ஆதிக்கமுள்ள 8 கிராமத்தில் கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் பகுதியைச் சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலால் பாஸ்டர் பகுதியிலுள்ள 8 கிராமங்களில் மட்டும் 160 ராணுவ வீரர்கள், 120 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவுக்குப் பிறகு பாஸ்டர் பகுதியிலுள்ள காங்கர், பிஜாப்பூர், சுக்மா மாவட்டங்களில் அதிக அளவு மாநில, மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த 8 கிராமங்களில் சுதந்திர தின விழா நடைபெற்றது. அங்கு வரலாற்றிலேயே முதன்முறையாக தேசியக் கொடியேற்றப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு இதுநாள் வரை இங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டதே இல்லை. தற்போது இந்த நிலைமாறி சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியேற்றப்பட்டதாக பாஸ்டர் போலீஸ் ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “இங்கு ஜனநாயக மாண்புகள் மீதும், சுதந்திர எண்ணங்கள் மீதும் கிராம மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு தேசியக் கொடி ஏற்றியபோது உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE