மீண்டும் மீண்டும் நிலச்சரிவு: இமாச்சல், உத்தராகண்டில் இதுவரை 60 பேர் பலி; 9,600+ வீடுகள் சேதம்

By செய்திப்பிரிவு

சிம்லா: கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் கனமழை பெய்துவருவதாலும், அடுத்தடுத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட், இமாச்சலில் இதுவரை 60 பேர் பலியாகினர்.

தென் மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே வட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்தது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, பிஹார் எனப் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மழை வெள்ளம், நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது விழுந்த சம்பவம், மின்சாரம் பாய்ந்த சம்பவங்கள், மின்னல் தாக்கிய சம்பவங்கள் என வட மாநிலங்களில் உயிர் பலிகள் ஏற்பட்டன. இமயமலையில் அமைந்துள்ள மாநிலங்களான இமாச்சலப் பிரதேசமும், உத்தராகண்ட் மாநிலமும் பருவமழையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

60 பேர் பலி: கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. மேக வெடிப்பு, நிலச்சரிவுகள், சாலைப் போக்குவரத்து துண்டிப்பு என மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. உத்தராகண்டிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி இமாச்சலப் பிரதேசத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாண்டி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் சம்மர் ஹில் பகுதியில் நேற்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 21 பேர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களில் பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

170 மேக வெடிப்புகள்... - இமாச்சலப் பிரதேசத்தில் இந்தப் பருவமழை தொடங்கியதிலிருந்து இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நிலச்சரிவுகளால் 9,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. மழையால் துண்டிக்கப்பட்ட 1220 சாலைகளில் 400 சாலைகள் மறுசீரமைக்கப்பட்டுவிட்டன. ஆனால், தொடர்ந்து மழை பெய்வது மீண்டும் மீண்டும் புதிய சவால்களைக் கொண்டு வருகிறது என்று முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு இமாச்சலப் பிரதேசத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. உத்தராகண்ட் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

அமைச்சர் கவலை: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகையில், "இமாச்சலில் மேகவெடிப்பும், கனமழையும் அச்சுறுத்தும் சூழலில் மத்திய அரசு மாநில அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும், விமானப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் இணைந்தே மக்கள் உயிர்களைக் காப்பாற்ற முயற்சித்து வருகிறோம். இமாச்சல் இயற்கைப் பேரிடம் மிகுந்த வேதனையளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE