நாட்டின் 77-வது சுதந்திர தினம்: உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான்: பிரான்சின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக இந்தியா என்றும் திகழ்கிறது. 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவுக்கு பிரான்ஸ் மக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் 2047-ம் ஆண்டு வரை இருநாடுகளும் புதிய லட்சங்களை எட்ட ஒன்றிணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கடந்த 1947 ஆகஸ்ட் 15-ல் ஆற்றிய உரையில் ‘‘நமது கனவுகள் நிறைவேற அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். அந்த கனவுகள் இந்தியாவுக்கானவை மட்டுமல்ல உலகத்துக்கானவை. ஆஸ்திரேலியாவில் சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய சமூகங்களுக்கு வாழ்த்துகள்.

அமெரிக்க வெளியுறவு துறை: சுதந்திர தின வாழ்த்துகள், இந்தியா! அனைவரது சிறப்பான எதிர்காலத்துக்கும் இணைந்து செயல்படுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் தீவிரமாக உள்ளன. மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வார்த்தைகள் இருநாட்டு அரசியலமைப்பு சட்டங்களிலும் இடம்பெற்றுள்ளன. அதுவே, இரு தேசங்களுக்கிடையிலான பலமாக உள்ளது.

மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்: சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவிக்கும் அதேவேளையில் இந்தியாவை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு பிரதமர் மோடிக்கும் வாழ்த்துகள். எங்களது சகோதர உறவுகளால் மொரிஷியஸ் பெருமிதம் கொள்கிறது. சுதந்திர இந்தியா அதன் மக்களின் ஈடு இணையற்ற வளம், புத்திகூர்மை ஆகியவற்றை உலகுக்கு எடுத்துகாட்டியுள்ளது.

மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்: இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை மாலத்தீவு மக்களுடன் இணைந்து அரசும் பரிமாறிக்கொள்கிறது. எப்போதும் நிலையான செழிப்புடன் இந்திய சுதந்திரம் நிலைத்து நிற்க ஆசீர்வதிக்கப்படட்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE