மணிப்பூர் முதல் மிஷன் 2047 வரை: பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையின் கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, தனது 10-வது சுதந்திர தின உரையில் நாட்டின் வளர்ச்சி குறித்த தனது அரசின் தொலைநோக்கு பார்வையையும், 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் திட்டத்தினையும் எடுத்துரைத்தார். சுமார் 90 நிமிடங்கள் பேசிய அந்த உரையின் முக்கிய அம்சங்களாவன:

> மணிப்பூர் மக்களுக்கு இந்தியா துணை நிற்கிறது: மணிப்பூர் மக்களுக்கு இந்தியா துணை நிற்கிறது. அங்குள்ள பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காணப்படும். மணிப்பூரில் அமைதியின்மை, வன்முறை மற்றும் பெண்களின் கண்ணியத்துக்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. மணிப்பூர் மக்கள் சிறிது காலமாக அமைதியைப் பேணி வருகின்றனர். அமைதிக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க மாநில மற்றும் மத்திய அரசு ஒன்றிணைந்து செயல்படுகின்றன, அதைத் தொடர்ந்து செய்வோம்.

> 140 கோடி மக்களும் குடும்ப உறுப்பினர்கள்: நாட்டிலுள்ள 140 கோடி குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நமது நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த ஆண்டு பல முக்கியமான மகத்தான நிகழ்வுகளின் ஆண்டு என்று கூறிய பிரதமர், இன்று சிறந்த ஆன்மீகப் புரட்சியாளர் ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் 150-வது நினைவு தினம் என்றும், சுவாமி தயானந்தாவின் 150-வது நினைவு ஆண்டு மற்றும் ராணி துர்காவதியின் 500-வது பிறந்த ஆண்டு ஆகியவற்றை சிறப்பாக கொண்டாட இருக்கிறோம். பக்தி யோகி சந்த் மீரா பாய் அவர்களின் 525 ஆண்டுகள் முன்னுதாரணத்தை எடுத்துரைத்த பிரதமர் அடுத்த குடியரசு தினம் நமது 75-வது குடியரசு தினம், பல வழிகளில், பல வாய்ப்புகள், பல சாத்தியங்கள், ஒவ்வொரு தருணமும் புதிய உத்வேகம், அடுத்தடுத்த தருணங்கள் புதிய வெற்றிகள், ஒவ்வொரு நிமிடமும் கனவுகள், ஒவ்வொரு நிமிடமும் உறுதிமொழிகள், இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு நமது நாட்டை கட்டி எழுப்புவதற்கு அமையாது என்றார்.

> 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு: 2014-ம் ஆண்டில் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது 2023-ம் ஆண்டில் 5-வது பெரிய பொருளாதாரமாக தனது உலகத் தரவரிசையை மேம்படுத்தியுள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். ஊழலை எதிர்த்துப் போராடுவது, அரசாங்க சலுகைகளை மாற்றுவதில் ஏற்படும் கசிவுகளைத் தடுப்பது மற்றும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவது மற்றும் ஏழைகளின் நலனுக்காக பொதுப் பணத்தைச் செலவழிப்பது ஆகியவற்றால் இந்த உயர்வு ஏற்பட்டது என்று பிரதமர் கூறினார்.

மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கான நிதி மாற்றம் அதிகரிப்பு: கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கிய பிரதமர், இந்தப் புள்ளி விவரங்கள் மாற்றத்தின் அழுத்தமான கதையைச் சொல்கின்றன என்றார். இந்த மாற்றம் மிகப்பெரியது மற்றும் தேசத்தின் மகத்தான திறனுக்கு ஒரு சான்றாகும் என்று கூறிய பிரதமர், 10 ஆண்டுகளுக்கு முன்பு, 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்குச் சென்றது, கடந்த 9 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 100 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் கருவூலத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது, இன்று அது ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.

ஏழைகளுக்கான வீட்டுவசதி 4 மடங்கு அதிகரிப்பு: விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி யூரியா மானியம் > முன்பு ஏழைகளின் வீடுகளைக் கட்ட 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது; இன்று அது 4 மடங்கு அதிகரித்துள்ளதுடன், ஏழைகளின் வீடுகளைக் கட்ட 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். மேலும் “சில உலகளாவிய சந்தைகளில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் யூரியா மூட்டைகளை, நமது விவசாயிகளுக்கு 300 ரூபாய்க்கு வழங்குகிறோம், எனவே அரசாங்கம் நம் விவசாயிகளுக்கு யூரியாவுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது.” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

முத்ரா திட்டமும், தொழில்முனைவோரும்: முத்ரா திட்டம், கோடிக்கணக்கான குடிமக்களை தொழில் முனைவோராக மாற்றவும், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகுத்துள்ளது என்று பிரதமர் விளக்கினார். “சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட முத்ரா திட்டம், நம் நாட்டு இளைஞர்களுக்கு சுயதொழில், தொழில் மற்றும் தொழில்களுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சுமார் எட்டு கோடி பேர் புதிய தொழில்களைத் தொடங்கியுள்ளனர், எட்டு கோடி மக்கள் தங்கள் தொழில்களைத் தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல், ஒவ்வொரு தொழில்முனைவோரும் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளனர். முத்ரா திட்டத்தின் மூலம் 8 முதல் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திறன் எட்டப்பட்டுள்ளது.”

கோவிட் -19 பெருந்தொற்றின்போது வணிகங்களும் ஆதரிக்கப்பட்டன, இதில் எம்.எஸ்.எம்.இ.க்கள் கிட்டத்தட்ட 3.5 லட்சம் கோடி ரூபாயுடன் ஆதரிக்கப்பட்டன, இதன் மூலம் அவை மூழ்குவது தடுக்கப்பட்டதோடு, வலிமையும் சேர்க்கப்பட்டது என்று பிரதமர் கூறினார்.

"ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்" முன்முயற்சி இந்தியாவின் கருவூலத்திலிருந்து 70,000 கோடி ரூபாய் பலன்களை நமது வீரர்களுக்கு எவ்வாறு கொண்டு வந்தது என்பதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்த பணம் கிடைத்துள்ளது என்றார்.

இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களித்து, நாட்டின் பல்வேறு மூலைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் இன்னும் பல முன்முயற்சிகள் உள்ளன என்றும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நாட்டின் வரவுசெலவுத் திட்டம் அனைத்து பிரிவுகளிலும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் நாட்டிற்கு நினைவூட்டினார்.

இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக, 13.5 கோடி ஏழை மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டு, புதிய நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்துள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார். வாழ்க்கையில் இதை விட பெரிய திருப்தி எதுவும் இருக்க முடியாது என்று அவர் கூறினார். வீட்டுவசதித் திட்டங்கள், ரூ. 50,000 கோடி ஒதுக்கீட்டில் தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் இந்த 13.5 கோடி மக்கள், வறுமையின் கஷ்டங்களிலிருந்து மீள உதவியுள்ளன என்று பிரதமர் மேலும் கூறினார்.

> தொலைத்தொடர்புத் துறையில் இந்தியா அடைந்த மாபெரும் முன்னேற்றங்கள்: இந்தியாவின் டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் பற்றி, நரேந்திர மோடி தனது உரையில் எடுத்துரைத்தார். நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் இணையதள வசதியைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட விரைந்த முயற்சிகளை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். டிஜிட்டல் புரட்சியின் நன்மைகள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் இணைய வசதி சென்றடைந்துள்ளது.

2014-ம் ஆண்டுக்கு முன்பு இணையத் தரவு கட்டண விகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த நாட்களைக் குறிப்பிட்ட பிரதமர், உலகின் மிக மலிவு விலையிலான இணையத் தரவு விகிதங்களை இந்தியா பெருமையாகக் கொண்டுள்ள தற்போதைய காலகட்டத்துடன் அதை ஒப்பிட்டார். இந்த செலவு குறைப்பு நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

5 ஜி அறிமுகம் செய்வதை நோக்கிய நாட்டின் விரைவான முன்னேற்றம் பற்றியும் எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இந்த அறிமுகம் அதிவேகமானதாக இருப்பதுடன் 700 க்கும் அதிகமான மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது என்றார்.

மேலும், 6 ஜி தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறுவதற்கான லட்சிய இலக்கையும் பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இந்த முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைப்பது குறித்தும் அவர் பேசினார்.

> மூன்று தீமைகளுக்கு எதிராக நமது முழு சக்தியுடன் போராட வேண்டும்: "நமது கனவுகள் நிறைவேற வேண்டுமானால், அது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், ஊழல், உறவுச் சார்பு, வஞ்சகத்தன்மை ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்துப் போராடுவது காலத்தின் தேவை" என்று வலியுறுத்தினார்

முதல் தீமையான ஊழல் என்பதுதான் நமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக உள்ளது. ஊழலில் இருந்து விடுதலை, ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு துறையிலும் ஊழலுக்கு எதிரானப் போராட்டம் என்பது காலத்தின் தேவையாகும். நாட்டுமக்களே, எனதருமை குடும்ப உறுப்பினர்களே, இது மோடியின் உறுதிப்பாடு, ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன் என்ற எனது தனிப்பட்ட உறுதிப்பாடு" என்று பிரதமர் கூறினார்.

இரண்டாவதாக, வாரிசு அரசியல் என்பது நமது நாட்டை சீரழித்துவிட்டது. இந்த வாரிசு அமைப்பு முறை நாட்டைக் கவ்விப் பிடித்து, நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்துவிட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.

மூன்றாவது தீமை வஞ்சகத்தன்மை என்று கூறிய பிரதமர் "இந்த வஞ்சகத்தன்மை என்பது நாட்டின் அடிப்படை சிந்தனையை, நமது இணக்கமான தேசியப் பண்பைக் களங்கப்படுத்திவிட்டது. இத்தகையவர்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். எனவே, இந்த மூன்று தீமைகளுக்கு எதிராக நாம் நமது முழு சக்தியுடன் போராட வேண்டும். ஊழல், உறவுச்சார்பு, வஞ்சகத்தன்மை என்ற சவால்கள் நமது நாட்டு மக்களின் விருப்பங்களை நசுக்கும் வகையில் வேர்விட்டு வளர்ந்துள்ளன”.

இந்தத் தீமைகள் சிலர் எவ்வளவுதான் திறமைசாளிகளாக இருந்தாலும் அவர்களின் திறமைகளைக் கொள்ளையடிக்கின்றன. இவை தான் நமது மக்களின் நம்பிக்கைகளை, விருப்பங்களைக் கேள்விக்குறியாக்குகின்றன. ஏழை மக்களாக இருந்தாலும் சரி, தலித் மக்களாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களில் பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் சரி, பழங்குடி சகோதர சகோதரிகளாக இருந்தாலும் சரி, நமது தாய்மார்களாக இருந்தாலும் சரி, சகோதரிகளாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் நமது உரிமைகளுக்காக இந்த மூன்று தீமைகளில் இருந்து விடுபட வேண்டும்.

ஊழலுக்கு எதிரான வெறுப்புச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். பொதுவாழ்வில் இதை விட பெரிய தீமை எதுவும் இருக்க முடியாது. ஊழலை ஒழிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார். பல்வேறு திட்டங்களிலிருந்து 10 கோடி போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டதாகவும், நிதி மோசடி செய்தவர்களின் 20 மடங்கு மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுள்ளது. அரசியல் கட்சிகளின் வாரிசு அரசியல் என்பது குடும்பத்தால், குடும்பத்திற்காக என்றாகி திறமைகளைக் கொல்கின்றது. இந்தத் தீமையிலிருந்து ஜனநாயகம் விடுபட வேண்டியது அவசியம்.

அதே போல், வஞ்சகத்தன்மை சமூகநீதியையும் பெருமளவு சிதைத்துவிட்டது. வஞ்சகத்தன்மையின் சிந்தனையும் அரசியலும், வஞ்சகத்தன்மைக்கான அரசுத் திட்டங்களின் மாதிரியும் சமூகநீதியைக் கொன்றுவிட்டன. அதனால்தான் வஞ்சகத்தன்மையும் ஊழலும் வளர்ச்சியின் மிகப்பெரிய எதிரிகளாகப் பார்க்கப்படுகின்றன. நாடு வளர்ச்சியடைய விரும்பினால், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற விரும்பினால், எந்தச் சூழ்நிலையிலும் நாட்டில் ஊழலை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது, இந்த மனநிலையுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

> இரண்டு கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக்க உறுதி: நாட்டின் இரண்டு கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக்க நாட்டிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் அரசு இணைந்து பணியாற்றி வருவகிறது. நாட்டில் இன்று 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்துள்ளதுள்ளனர். இன்று கிராமங்களில் ஒரு சகோதரி வங்கியிலும், ஒரு சகோதரி அங்கன்வாடியிலும் ஒரு சகோதரி மருந்துகளை விநியோகம் செய்வதையும் காணலாம்.

கிராமப்புற வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் திறனைப் பெருமளவு பயன்படுத்த வேண்டும். 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை இயக்குவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் கடன் மற்றும் பயிற்சி வழங்கப்படும். "ட்ரோன் கி உடான்" திட்டம் இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

> விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்: "வரும் நாட்களில், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, பாரம்பரிய கைவினையில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள், குறிப்பாக ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயனடையும் ஒரு திட்டத்தை நாங்கள் தொடங்குவோம். சுமார் ரூ.13-15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் தொடங்கும் இத்திட்டத்தின் மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்" என்று பிரதமர் கூறினார்.

> 25,000 மக்கள் மருந்தக மையங்களை திறக்க முடிவு: மக்கள் மருந்தக மையங்கள் மக்களுக்கு குறிப்பாக நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், மாதந்தோறும் ரூ.3000 பில் வருகிறது. மக்கள் மருந்தக மையங்கள் மூலம், 100 ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை, 10 முதல், 15 ரூபாய்க்கு வழங்குகிறோம். மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.

>இந்தியா புதிய உத்திபூர்வ வலிமையைப் பெற்றுள்ளது: "சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா ஒரு புதிய உத்திபூர்வ வலிமையைப் பெற்றுள்ளது, இன்று நமது எல்லைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், ஆயுதப்படைகளை நவீனமயமாக்குவதற்கும், எதிர்கால அனைத்து சவால்களையும் சமாளிக்க அவர்களை மாற்றுவதற்கும் பல ராணுவ சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

> பெண்கள் தலைமையிலான வளர்ச்சி அவசியம்: பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது எவ்வாறு அவசியம் என்பதையும் தனது சுதந்திர தின உரையில் விளக்கிய பிரதமர் மோடி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்டுள்ளது என்று இந்தியா இன்று பெருமையுடன் கூற முடியும் என்று நினைவு கூர்ந்தார். சந்திரயான் திட்டத்தை பெண் விஞ்ஞானிகளும் வழிநடத்துகிறார்கள். ஜி 20-ல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி பிரச்சினையை முன்னெடுத்துள்ளதாகவும், ஜி 20 நாடுகள் அதை ஏற்றுக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

'நாரி சம்மான்' பற்றிப் பேசிய பிரதமர், தமது வெளிநாட்டுப் பயணம் ஒன்றின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், அங்கு அந்த நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் இந்தியாவில் உள்ள பெண்கள் அறிவியல் மற்றும் பொறியியல் படிக்கிறார்களா என்று கேட்டார். இன்று நமது நாட்டில் ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) படிப்பில் சிறுவர்களை விட மாணவிகள் அதிகமாக உள்ளனர் என்றும், இன்று உலகம் நமது இந்த திறனை உற்று நோக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.

> உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்ததற்கு 140 கோடி மக்களின் முயற்சிகளே காரணம்: உலகின் 5- வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்ததற்கு 140 கோடி இந்திய மக்களின் முயற்சிகளே காரணம். கசிவுகளைத் தடுத்து, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கி, ஏழைகளின் நலனுக்காக அதிக பணத்தை இந்த அரசு செலவழித்ததால் இது நிகழ்ந்துள்ளது என்று பிரதமர் கூறினார். "இன்று நான் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாடு பொருளாதார ரீதியாக வளமாக இருக்கும்போது, அது கஜானாவை நிரப்பாது; இது தேசத்தின் மற்றும் அதன் மக்களின் திறனை அதிகரிக்கிறது. அரசாங்கம் தனது குடிமக்களின் நலனுக்காக ஒவ்வொரு பைசாவையும் செலவிடுவதாக உறுதியளித்தால் முடிவுகள் தானாகவே வரும். 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி அனுப்பியது. கடந்த 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ரூ.100 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த எண்களைப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய மாற்றம் திறன் அதிகரித்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள்!"என்று கூறினார்.

உலகம் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளும் சமீபத்திய பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், "கோவிட் -19 தொற்று நோயிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை, மேலும் போர் ஒரு புதிய சிக்கலை உருவாக்கியது. இன்று, உலகம் பணவீக்க நெருக்கடியை எதிர்கொள்கிறது. பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து பேசிய பிரதமர், "பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா தன்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளது. நமது விஷயங்கள் உலகை விட சிறந்தவை என்று நாம் நினைக்க முடியாது, எனது நாட்டு மக்கள் மீதான பணவீக்கத்தின் சுமையைக் குறைக்க நான் இந்தத் திசையில் அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த எனது முயற்சிகள் தொடரும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்