அஜித் பவாருடனான சந்திப்பால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பமில்லை - என்சிபி தலைவர் சரத் பவார் விளக்கம்

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருடனான சந்திப்பால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் கடந்த மாதம் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இவர்கள் மாநிலத்தில் ஆளும் பாஜக, சிவசேனா (ஷிண்டே அணி) கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் துணை முதல்வர் ஆனார். அதன் பிறகு அஜித் பவார் இரண்டு முறை சராத் பவாரை சந்தித்து, தங்களுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்க சரத் பவார் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு புனே நகரில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் சரத் பவாரும், அஜித் பவாரும் ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சரத் பவாரின் நடவடிக்கைகளை குறை கூறும் வகையில் சிவசேனா கட்சியின் (உத்தவ் பிரிவு) சாம்னா நாளிதழில் நேற்று தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. “அஜித் பவார், சரத் பவாரை அடிக்கடி சந்தித்துப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.இந்த சந்திப்பை சரத் பவார் தவிர்க்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது சரத் பவார் மீதான நம்பிக்கையை சிதைப்பதாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சரத் பவார்பாராமதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அஜித் பவாரை நான் சந்தித்ததால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை. நாங்கள்ஒற்றுமையாக உள்ளோம். ‘இண்டியா’ கூட்டணியின் அடுத்தகூட்டம் வரும் 31 மற்றும் செப். 1-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். உத்தவ் தாக்கரே மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆகியோருடன் இணைந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE