சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது - திருப்பதி மலை பாதையில் கரடி திரிவதால் பக்தர்கள் அச்சம்

By என்.மகேஷ்குமார்


திருமலை: திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு சுமார் 8 மணியளவில் பெற்றோர்களுக்கு சற்று முன்பாக நடந்து சென்ற நெல்லூரை சேர்ந்தலக்‌ஷிதா (6) எனும் சிறுமியை சிறுத்தை இழுத்து சென்று அடித்துக்கொன்றது.

இதற்கு முன்பு கடந்த ஜூன் 24-ம் தேதி, கர்னூலை சேர்ந்த 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி பிடித்துச் சென்றது. இதனைப் பார்த்த பெற்றோர், பக்தர்கள் துரத்தியதால், அச்சிறுவனை விட்டு விட்டு, சிறுத்தை ஓடி விட்டது. இந்த சம்பவம் பக்தர்களை அச்சத்தில் உலுக்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிறு முதல், அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை அலிபிரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக திருமலைக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், இதேபோன்று, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மோட்டார் சைக்கிள்கள் அனுமதிக்கப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சிறுமி லக்‌ஷிதாவை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் சேஷாசலம் வனப்பகுதியில், 3 இடங்களில் இரும்புக் கூண்டுகளை அமைத்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 7-வது மைலில் அமைக்கப்பட்ட ஒரு கூண்டில் 5 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சிறுத்தை சிக்கியது. அதற்கு உடலில் காயம் ஏற்பட்டிருந்ததால், திருப்பதியில் உள்ள எஸ்வி மிருக காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

5 சிறுத்தைகள்: ட்ரோன் கேமரா மூலம் கடந்த 3 நாட்களாக கண்காணித்ததில், 7-வது மைல், நாமால கவி, லட்சுமிநரசிம்மர் கோயில் ஆகிய வனப்பகுதிகளில் 5 சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளது தெரியவந்துள்ளது. ஆதலால், அவற்றையும் கூண்டுகள் மூலம் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்தில் இரண்டாயிரமாவது படிக்கட்டின் அருகே ஒரு கரடியை பக்தர்கள் பார்த்து அலறி அடித்து ஓடியுள்ளனர். பின்னர், அந்த கரடியை பக்தர்கள், வன ஊழியர்கள் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE