“உலக அரங்கில் சரியான இடத்தில் இந்தியா” - சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக அரங்கில் தனக்கான சரியான இடத்தை இந்தியா பெற்றுள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறி இருப்பதாவது: "நாட்டு மக்கள் அனைவருக்கும், 77-வது சுதந்திர தின நல் வாழ்த்துக்களை இதயபூர்வமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இது நம் அனைவருக்கும் பெருமிதம் நிறைந்த மங்களகரமான தருணம். கொண்டாட்டம் நிறைந்த இந்த தருணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள், நகரங்களில் வாழ்பவர்கள், கிராமங்களில் வாழ்பவர்கள் என நாடு முழுக்க உள்ள மக்கள் அனைவரும் சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாட எவ்வாறு தயாராகிறார்கள் என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியையும் பெருமித உணர்வையும் தருகிறது.

நமது நாடு தனது சரியான இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக போராடிய அறிந்த மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாட்டு மக்களுடன் இணைந்து நானும் எனது அஞ்சலியை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மாதங்கினி ஹஸ்ரா, கனக்லதா பருவா போன்ற சிறந்த பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் பாரத மாதாவுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். சத்தியாகிரகம் எனும் கடினமான பாதையில் பயணித்த தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளுக்கு இணையாக கஸ்தூரிபா காந்தி திகழ்ந்துள்ளார்.

நம் நாட்டில் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொருளாதார அதிகாரம் குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை பலப்படுத்துகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு சக குடிமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நமது சகோதரிகளும் மகள்களும் சவால்களை தைரியமாக வென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெண்கள் மேம்பாடு, நமது சுதந்திர போராட்டத்தின் லட்சியங்களில் ஒன்றாகும்.

உலக அரங்கில் இன்று இந்தியா தனக்கான சரியான இடத்தைப் பெற்றுள்ளது. அதோடு, சர்வதேச வரிசையிலும் உயர்ந்திருக்கிறது. உலகம் முழுவதும் வளர்ச்சியையும், மனிதாபிமான இலக்குகளையும் ஊக்குவிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஜி20 தலைமைப் பொறுப்பு உள்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. உலகின் 3-ல் 2 பங்கு மக்களைக் கொண்டுள்ள ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதன் மூலம், சரியான பாதையில் விவாதங்களை முன்னெடுக்க தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதால், வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் சரியான முடிவுகள் எடுக்கப்படுவதை இந்தியா ஊக்குவிக்கும். வர்த்தகம் மற்றும் நிதி தவிர்த்து, மனித வளர்ச்சி குறித்தும் விவாதங்களை இந்தியா முன்னெடுக்கிறது. உலகலாவிய பிரச்சினைகளைக் கையாள்வதில் இந்தியாவின் தலைமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உறுப்பு நாடுகள் பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நம்புகிறேன்" என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்