இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு, கனமழை பலி 41 ஆக அதிகரிப்பு - அமித் ஷா இரங்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை, நிலச்சரிவு, மேக வெடிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாகவும், நிலச்சரிவு காரணமாகவும் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்வதற்கான உறுதியை கடவுள் அவர்களுக்கு அளிக்க பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தலைநகர் ஷிம்லா உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "ஷிம்லாவின் சம்மர்ஹில் பகுதியில் சிவன் கோவில் அருகே நிகழ்ந்த நிலச்சரிவு குறித்தும் அங்கே மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டேன். நிலச்சரிவில் சிக்கிக் கொண்டவர்களை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைக்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறேன். ஷிம்லாவில் பெய்த திடீர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்புக்காகவும், விரைவாக குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.

சோலன் மாவட்டத்தில் நிகழ்ந்த மேக வெடிப்பு காரணமாக 7 பேர், ஷிம்லாவில் கோயில் சரிந்ததில் 9 பேர், மாண்டி மாவட்டத்தில் 7 பேர் என பலர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார். இதனிடையே, இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயிரிழந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE