மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி கண்டிப்பாக போட்டியிட வேண்டும்: ராபர்ட் வதேரா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி கண்டிப்பாக போட்டியிட வேண்டும். உத்தரப் பிரதேசத்தின் அமேதி அல்லது சுல்தான்பூர் ஆகிய தொகுதிகளில் எது பொருத்தமானதோ அதில் அவரை கட்சி நிறுத்த வேண்டும். மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதை நான் விரும்புகிறேன். தேர்தல் பிரச்சாரங்களை பிரியங்கா காந்தி சிறப்பாக செய்கிறார்; சரியாக உரை நிகழ்த்துகிறார். கட்சியின் தூணாக அவர் உள்ளார். அவரது கடின உழைப்பை கட்சி கருத்தில் கொள்ள வேண்டும். அவர் நாடாளுமன்றத்துக்குச் செல்வது மிகவும் நல்லது. பெரிய அளவில் கட்சிக்கு உதவ இது வழிவகுக்கும்.

தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று கேட்கிறீர்கள். அரசியலில் அனைத்துக்கும் ஒரு காலம் வர வேண்டும். நானும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். ஆனால், முதலில் பிரியங்கா காந்தி நாடாளுமன்றம் செல்ல வேண்டும். அவரைப் பின் தொடர்ந்து நான் தேர்தலில் போட்டியிடுவேன். எதிர்காலத்தில் இது நிகழும். பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாது; அவர் தேர்தலில் போட்டியிடவும் கட்சி விரும்பும் என்று நான் நம்புகிறேன்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மக்களின் குரலை பிரதிபலிக்கிறார்கள். இதன் காரணமாக அரசு இவர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. ஆனால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அச்சமற்றவர்கள். அவர்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கக் கொடுக்க அவர்கள் மேலும் வலிமை அடைவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE