“கூட்டணிக்குள் குழப்பமில்லை; ‘இண்டியா’ கூட்டத்தை மும்பையில் வெற்றிகரமாக நடத்துவோம்” - சரத் பவார்

By செய்திப்பிரிவு

பாரமதி: மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் குழப்பம் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் அடுத்தக் கூட்டம் மும்பையில் வெற்றிகரமாக நடைபெறும் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் அஜித் பவார் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, சரத் பவாருடன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியிலும் அஜித் பவார் ஈடுபட்டார். சரத் பவாரைச் சந்தித்துப் பேசிய அஜித் பவார், கட்சி இரண்டாக உடைந்துவிடக்கூடாது என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அஜித் பவார் முதலில் தனியாகவும், பின்னர் ஆதரவு எம்எல்ஏக்களுடனும் சென்று சரத் பவாரைச் சந்தித்தார். தொடர்ச்சியான இந்தச் சந்திப்புகள் காரணமாக, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் சரத் பவார் தொடருகிறாரா என்ற கேள்வி எழுந்தது. சிவ சேனா(உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) கட்சியின் இதழான சாம்னாவில், இதுபோன்ற தொடர் சந்திப்புகள் ஏற்புடையதல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் பிரிந்த பின்னர் தனது சொந்த ஊரான பாரமதிக்கு சரத் பவார் முதல்முறையாக இன்று (ஆகஸ்ட் 14) வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சரத் பவார் - அஜித் பவார் சந்திப்புகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது குறித்து சரத் பவார் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சரத் பவார், "மகா விகாஸ் அகாதி கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இண்டியா கூட்டணியின் கூட்டத்தை நாங்கள் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்துவோம். இண்டியா கூட்டணியின் கூட்டத்தை மும்பையில் நடத்துவதற்கான பொறுப்பை நானும், உத்தவ் தாக்கரேவும், மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலியும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்தக் கூட்டம் மும்பையில் உள்ள ஆடம்பர நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும். மாநில அளவிலும் தேசிய அளவிலும் பாஜகவோடு இணைந்துள்ள அஜித் பவார் பிரிவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தொடர்பும் கிடையாது" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE