ம.பி அரசு மீது 50 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு: பிரியங்கா மீது 2 வழக்குகள் பதிவு

By செய்திப்பிரிவு

இந்தூர்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ‘எக்ஸ்’ சமூகதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒப்பந்ததாரர்கள் சங்கம், உயர் நீதிமன்ற தலைமைநீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 50 சதவீத கமிஷன் தொகையை பெற்ற பின்பே, ஒப்பந்தங்களுக்கான தொகையை மாநில அரசு விடுவிக்கிறது என தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் பாஜக அரசு 40 சதவீத கமிஷன் வசூலித்தது. மத்தியப் பிரதேசத்தில் தனது சொந்த சாதனையை பாஜக அரசு முறியடித்துள்ளது. 40 சதவீத கமிஷன் பெற்ற பாஜக அரசை கர்நாடக மக்கள் வெளியேற்றினர். தற்போது 50 சதவீத கமிஷன் பெறும் மத்திய அரசை மக்கள் வெளியேற்றுவர்’’ என கூறியிருந்தார். இதேபோன்ற பதிவை காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், அருண் யாதவ் ஆகியோரும் வெளியிட்டிருந்தனர்.

இதுகுறித்து ம.பி. உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:

போலி கடிதம் அடிப்படையில்உங்களை ட்விட் போட வைத்துள்ளனர். உங்களையும் பொய்யர் என அவர்கள் நிரூபித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு ஏற்கெனவே நம்பிக்கையில்லை. ட்விட்டில் கூறியுள்ளகுற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை காட்டும்படி காங்கிரஸ் கட்சியினருக்கு நான் சவால் விடுக்கிறேன். இல்லையெ ன்றால், இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார்.

போலி கடிதத்தின் அடிப்படையில் பொய்த் தகவலை வெளியிட்டுள்ளதாக பிரியங்கா காந்தி, கமல்நாத், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவ் ஆகியோர் மீது ம.பி. பாஜக தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்தூர் காவல் ஆணையர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ஞானேந்திர அவஸ்த்தி என்ற பெயரில் ஒரு போலி கடிதம் சமூக இணையதளத்தில் வலம் வருவதாகவும், அதில் மாநில அரசு 50 சதவீத கமிஷன் கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பாஜக சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நிமேஷ் பதக் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் பிரியங்கா மீது இந்திய தண்டனை சட்டம் 420, 469 பிரிவுகளின் கீழ் போலீஸில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE