பள்ளி பாடப்புத்தகங்களை உருவாக்க என்சிஇஆர்டி குழுவில் சுதா மூர்த்தி, ஷங்கர் மகாதேவன் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

3 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை இறுதி செய்ய உருவாக்கப்பட்ட என்எஸ்டிசி குழுவில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி, பாடகர்ஷங்கர் மகாதேவன், பொருளாதார நிபுணரும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

19 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பாடத் திட்டம் மற்றும் கற்பித்தல் கற்றல் பொருள் குழு (என்எஸ்டிசி), தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் (என்ஐஇபிஏ) தலைவர் எம்.சி.பந்த் தலைமையில் செயல்படும். இவ்வாறு என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வழிநடத்தல் குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புடன் (என்சிஎஃப்-எஸ்இ) பாடத்திட்டத்தை சீரமைக்கஇந்த குழு இணைந்து செயல்படும்.

என்எஸ்டிசி-க்கு பள்ளி பாடத்திட்டம் மற்றும் 3 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்களை உருவாக்க அதிகாரம் அளிக்கப்படும். மேலும்என்எஸ்டிசியால் உருவாக்கப்பட்ட மற்றும் இறுதி செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் பிற கற்றல் பொருட்கள் என்சிஇஆர்டியால் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்படும்.

பள்ளி பாடப்புத்தக உருவாக்க குழுவில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியரான மஞ்சுல் பார்கவ் இணைத் தலைவராகவும், கணிதவியலாளர் சுஜாதா ராம்துரை, பேட்மிண்டன் வீரர் யு விமல் குமார், கொள்கை ஆய்வு மையத்தின் தலைவர் எம்.டி. னிவாஸ் மற்றும் பாரதிய பாஷா சமிதியின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

பல்வேறு துறை நிபுணர்கள்உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE