சமூக வலைதளங்களின் முகப்பு பக்கத்தில் தேசியக் கொடி படத்தை வைக்க வேண்டும்: மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடுவதை முன்னிட்டு, அவரவர் சமூக வலைதளப் பக்கங்களின் முகப்பு பக்கத்தில் மூவர்ண தேசியக் கொடி படத்தை வைக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ‘ஹர் கர் திரங்கா’ என்று இயக்கத்தை பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்திருந்தார். நாட்டின் பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஓராண்டாகவே வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், நாளை சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

படத்தை பதிவேற்றுங்கள்: இதை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஹர் கர் திரங்கா இயக்கத்தின் ஒரு கட்டமாக, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதள முகப்பு படமாக மூவர்ண தேசியக் கொடியின் படத்தை வைக்க வேண்டும். இந்த நாட்டுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக மூவர்ணக் கொடி படத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த படத்தை, ‘www.harghartiranga.com’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பில் தேசியக் கொடியை பிரதமர் மோடி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE