பழங்குடிகளே நாட்டின் உண்மையான உரிமையாளர்கள்: வயநாட்டில் ராகுல் காந்தி பேச்சு

By செய்திப்பிரிவு

வயநாடு: பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில் பேசியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை திரும்ப பெற்றதால், மீண்டும் எம்பி ஆக பொறுப்பேற்ற ராகுல் காந்தி , முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தடைந்தார். இன்று (ஞாயிறு) இரண்டாவது நாளில் ராகுல் காந்தி, வயநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புதிய மின் கட்டமைப்பு சேவையை அவர் தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள். அவர்களைக் குறிக்க ஆதிவாசி என்றொரு வார்த்தை இருக்கிறது. அதன் அர்த்தம் நிலத்தின் அசல் உரிமையாளர்கள் என்பதாகும். அந்த வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஞானத்தின் அடையாளம். அது நாம் வாழும் இந்த பூமியின் மீதான புரிதலின் வெளிப்பாடு, நமது பூமி மீது நாம் கொண்டிருக்கும் உறவினை சுட்டிக்காட்டுவது. ஆதிவாசி எனும் வார்த்தை நமது பழங்குடியின சகோதர, சகோதரிகள் தான் தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள உதவுகிறது. அதனால் உண்மையான உரிமையாளர்களுக்கு நிலத்தின், வனத்தின் மீதான உரிமையை வழங்க வேண்டும். அவர்கள் விரும்பியதை செய்யும் உரிமையையும் வழங்க வேண்டும்.

இந்த மண்ணின் அசல் உரிமையாளர்கள் என்ற வகையில் உங்களின் குழந்தைகள் பொறியாளர் ஆக வேண்டுமா? மருத்துவர் அல்லது வழக்கறிஞர் ஆக வேண்டுமா? அல்லது தொழில் முனைவோராக வர வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதேவேளையில் வனத்தின் மீது உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. வனத்திலிருந்து விளைவிக்கும் பொருட்களுக்கான உரிமை உங்களுடையது.

ஆனால் சிலர் உங்களை 'வனவாசி' என்று அழைக்கிறார்கள். வனவாசி என்ற சொல், இந்தியாவின் அசல் உரிமையாளர்கள் நீங்கள் என்ற உரிமையை மறுக்கிறது. அது உங்களை கட்டுப்படுத்துகிறது. வனவாசி என்ற சொல்லின் பின்னால் இருக்கும் அர்த்தம், நீங்கள் வனத்தினுள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சுருக்குகிறது. இதை ஏற்பதற்கில்லை. இந்த சொல் உங்களின் வரலாற்றை சிதைக்கிறது. உங்களின் பாரம்பரியம் மற்றும் நாட்டுடன் உங்களது உறவை சிதைக்கிறது.

ஆனால் எங்களுக்கு நீங்கள் ஆதிவாசி தான். உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்பது ஒரு பேஷன் வார்த்தையாகிவிட்டது. ஆனால் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசி நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

ஆதிவாசிகளிடமிருந்து வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மட்டுமல்ல ஒருவருக்கொருவர் எப்படி அணுகுவது, எப்படி மதிப்பது என்பதைக் கூட கற்றுக் கொள்ள முடியும். ஆதிவாசிகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்" என்றார்.

முன்னதாக நேற்று ராகுல் காந்தி உதகையில் முத்தநாடு மந்தில் பழங்குடியின மக்களை சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் அங்கு செலவிட்ட ராகுல் காந்தி, அங்கிருந்து வயநாடு புறப்படும் போது, அவரது பயணம் குறித்து கேட்டதற்கு, ‘நான் பழங்குடியின மக்களை நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE