சமூகவலைதள டிபி-யில் தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி: நாட்டு மக்களுக்கும் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படமாக தேசியக் கொடியை மாற்றியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "வீடுதோறும் தேசியக் கொடி இயக்கத்தின் கீழ், நாம் அனைவரும் நமது சமூக ஊடகப் பக்கங்களின் முகப்புப் படமாக தேசியக் கொடியை வைப்போம். நம் தேசத்துக்கும் நமக்குமான பிணைப்பை அதிகரிக்கும் இந்த தனித்துவ முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு தருவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஒலிபரப்பான 103-வது ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்' இயக்கம் தொடங்கப்படும். இதன்படி, அவரவர் பகுதியில் இந்த தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தி செல்ஃபி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதி அணிவகுப்பு ஒத்திகை: சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியேற்றி உரையாற்றும் பிரதமர் மோடி, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்கவுள்ளார். இதனையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமருக்‍கான இடத்தில் அதிகாரி ஒருவர் நின்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். முப்படை வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஒத்திகை நிகழ்ச்சியை ஒட்டி டெல்லியில் காலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE