உயர் நீதிமன்ற நீதிபதிகள் 23 பேர் இடமாற்றம் - உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 23 நீதிபதிகளை இடமாற்ற செய்ய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதியும் இதில் அடங்கும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைந்துள்ளது. இந்த கொலீஜியத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 23 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் எம். பிரச்சாக், பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் 2 வருட சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தவர் நீதிபதி ஹேமந்த் எம். பிரச்சாக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், குஜராத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் அல்பேஷ் கே. கோக்ஜே, குமாரி கீதா கோபி, சமீர் ஜே. தாவே ஆகியோரும் முறையே அலகாபாத், சென்னை,
ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் அர்விந்த் சிங் சங்வான், அவ்னீஷ் ஜிங்கான், ராஜ்மோகன் சிங், அருண் மோங்கா ஆகியோர் முறையே அலகாபாத், குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அலகாபாத்தில் பணியாற்றி வரும் நீதிபதி விவேக் குமார் சிங், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னூரி லஷ்மண், எம்.சதீர் குமார், ஜி. அனுபமா சக்கவர்த்தி ஆகியோர் முறையே ராஜஸ்தான், சென்னை, பாட்னா உயர் யநீதிமன்றங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கொலீஜியம் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE