மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட், பஞ்சாபில் காங். தனித்து போட்டி - இண்டியா கூட்டணியின் திட்டத்துக்கு சிக்கல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பாஜக தலைமையில் மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கிறார். இதை முறியடிக்க, 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ எனும் பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன. இதன் சார்பில் நாடு முழுவதிலும் மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளரை போட்டியிட வைக்கவும் திட்டமிட்டுள்ளன. இதற்கு சிக்கல் ஏற்படும் வகையில், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மத்தியக்குழு முடிவு எடுத்துள்ளது.

இந்த முடிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை, இக்குழுவின் 3 நாள் கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்கத்தின் அரசியல் வேறு வகைப்பட்டது என காரணம் கூறப்படுகிறது. இதன்படி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட மார்க்சிஸ்ட் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், இண்டியா கூட்டணியின் கொள்கைக்கு எதிராக தேர்தல் வியூகம் வகுத்துள்ள முதல் கட்சியாக மார்க்சிஸ்ட் கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் சுமார் 34 வருடங்களாக ஆட்சி செய்த இடதுசாரிகளை 2011-ல் திரிணமூல் காங்கிரஸ் வீழ்த்தி ஆட்சி அமைத்தது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் வட்டாரம் கூறும்போது, “நாங்கள் திரிணமூல்கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிரான வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என பாஜக கருதுகிறது. இதற்கு நாங்கள் வழிவகை செய்ய மாட்டோம். எனவே அனைத்து தொகுதிகளிலும் தகுந்த வேட்பாளர்களை தேடும்படி மாநிலத் தலைமைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளதால், இண்டியா கூட்டணியின் 2024 தேர்தல் வெற்றிக்கு இது முக்கிய மாநிலமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், 2014 தேர்தலில் 34 தொகுதிகளின் வென்ற திரிணமூல் கட்சி 2019 -ல் 22 தொகுதிகளில் வெற்றியும் 19 தொகுதிகளில் 2-வது இடமும் பெற்றது. இதே 2019-ல் 18 தொகுதிகளில் வென்ற பாஜக தனது வாக்குகளை 23% ஆக அதிகரித்துக் கொண்டது.

பஞ்சாபிலும் இண்டியா கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு முதல்முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் ஆம் ஆத்மியை எதிர்த்து காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தனது அறிவிப்பில், “மாநிலத்தின் 13 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தும். ஆம் ஆத்மி கட்சியுடன் எங்கள் நட்பு என்பது தேசிய அளவிலானது. ஆனால் மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு ஏற்றபடிதான் ஆம் ஆத்மியுடன் உறவு இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதுபோல், டெல்லி காங்கிரஸ் தலைவர்களும் ஆம் ஆத்மியுடன் கூட்டு வைக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது. மேலும் சில மாநிலங்களில் இண்டியா கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இடையே அடிமட்ட நிலையில் மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது. எனினும், தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சுமார் 7 மாதங்கள் இருப்பதால் அதற்குள் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும் என இண்டியா கூட்டணி நம்புவதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE