புதுடெல்லி: இந்திய கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் 'தேசத் துரோக சட்டம்' நீக்கப்படவில்லை என்றும், மாறாக அது வேறு வடிவில் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய நாய சன்ஹிதா மசோதா, பாரதிய சக்ஷவா மசோதா ஆகிய 3 மசோதாக்களை அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மூன்று மசோதாக்களும் தற்போது அமலில் உள்ள 1860-ல் கொண்டுவரப்பட்ட இந்திய குற்றவியல் சட்டம், 1898-ல் கொண்டு வரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1872-ல் கொண்டு வரப்பட்ட இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமித் ஷா, இந்த மசோதாக்கள் சட்டமாக ஆகும்போது, தேசத் துரோக சட்டம் ரத்தாகும் என்று கூறியுள்ளார்.
ஆனால், தேசத் துரோக சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு மாறாக, வேறு வடிவில் அது வலுப்படுத்தப்பட்டுள்ளதை மசோதாவில் இருக்கும் அம்சங்கள் உணர்த்துகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ தேசத் துரோக குற்றம் குறித்தும், அதற்கான தண்டனை குறித்தும் விவரிக்கிறது. இதற்கு மாற்றாக மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் தேசத் துரோகத்துக்கான தண்டனை குறித்து பிரிவு 150-ல் விளக்கப்பட்டுள்ளது. அதில், தேசத் துரோகம் என்ற வார்த்தைக்குப் பதிலாக, 'நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்படு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுவது' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
பிரிவு 150-ல் வேண்டுமென்றோ, தெரிந்தோ, வார்த்தைகளாலோ, பேச்சின் மூலமாகவோ, எழுத்தின் மூலமாகவோ, அறிகுறிகள் மூலமாகவோ, மின்னணு தகவல் தொடர்பு மூலமாகவோ, வேறுவிதமாகவோ பிரிவினை பேசுவது, ஆயுதமேந்தி கிளர்ச்சியில் ஈடுபடுவது, பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிப்பது ஆகியவை இந்திய இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல். இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» “மணிப்பூர் பற்றி எரிகிறது... மக்களவையில் பிரதமர் மோடி ஜோக் அடிக்கிறார்...” - ராகுல் காட்டம்
ஆனால், தற்போதைய தேசத் துரோக சட்டம் பிரிவு 124A, இதே வரையறைகளையே கொண்டுள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனையோ, ஆயுள் தண்டனையுடன் அபராதமோ அல்லது மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத் தண்டனையோ விதிக்கப்படும் என்று உள்ளது. அதுமட்டுமின்றி, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் கருத்துகள், இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகாது. மேலும், அரசுக்கு எதிராக அதிருப்தியைத் தூண்டும் அல்லது தூண்ட முயற்சிக்கும் கருத்துக்களும் தேசத் துரோக பிரவின் கீழ் குற்றமாகாது.
கும்பல் கொலைகளுக்கு மரண தண்டனை: முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில் 3 மசோதாக்களை தாக்கல் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதன் மூலம் இந்திய கிரிமினல் சட்டங்களில் மிகப் பெரிய சீர்திருத்தம் நிகழ இருப்பதாகத் தெரிவித்தார். கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரதிய சுரக்ஷ சன்ஹிதா மசோதா மூலம் இந்திய கிரிமினல் நீதி முறையில் 313 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் குற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு 90 சதவீதமாக இருக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மாற்றப்பட உள்ள 3 சட்டங்களும் ஆங்கிலேயர் காலத்தில், ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டவை என தெரிவித்த அமித் ஷா, இவை தண்டிக்கும் நோக்கம் கொண்டவையே தவிர, நீதி வழங்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்றார். இந்த புதிய 3 மசோதாக்கள் மூலம் இந்தியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த 3 புதிய மசோதாக்கள் குறித்தும், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 ஆண்டு கால விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். குடிமக்களின் பாதுகாப்பு, உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
காவல் துறையினர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாத நிலையை இந்த மசோதா மூலம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும், பார் கவுன்சில், சட்ட ஆணையம் ஆகியவற்றின் கருத்துக்கள் இந்த மசோதாக்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருந்தாலும் அவர் குறித்த விசாரணை தொடர இதில் வழி செய்யப்பட்டுள்ளது என்றும், பிரிவினைவாதம், நாட்டுக்கு எதிராக போர் நடத்துவது ஆகியவை இந்த புதிய சட்டத்தின் கீழ் தனியாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago