உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல ஆன்லைன் நுழைவுச்சீட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு செல்ல ஆன்லைனில் நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை அமல் செய்யப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல நுழைவுச் சீட்டு பெறுவது கட்டாயமாகும். இதன்படி உச்ச நீதிமன்ற வளாக வாயிலில் அமைந்துள்ள கவுன்ட்டரில் நுழைவுச் சீட்டை பெற வேண்டும். ஒவ்வொரு நாளும் கவுன்ட்டரில் நுழைவுச் சீட்டை பெற வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சுஸ்வாகதம் என்ற இணையதளத்தை (https://suswagatam.sci.gov.in) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று அறிமுகம் செய்தார். இந்த இணையதளம் வாயிலாக அனைவரும் ஆன்லைனில் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு செல்ல விரும்பும் பார்வையாளர், மனுதாரர் ஆகியோர் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அடையாள ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் எஸ்எம்எஸ், இ-மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். இணையதளம், இ-மெயிலில் இருந்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் ஒரு மாதத்துக்கான நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும்போது, "உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி சோதனை அடிப்படையில் ஆன்லைன் நுழைவுச் சீட்டு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து முழுமையாக அமலுக்கு வந்துள்ளது" என்றார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா கூறும்போது, “உச்ச நீதிமன்றத்துக்கு காலை 9 மணிக்கு வந்தால் மட்டுமே 10.30-க்குள் நுழைவுச்சீட்டு கிடைக்கும். ஆன்லைன் நுழைவுச்சீட்டு நடைமுறையால் இனிமேல் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE