மணிப்பூர் விவாதத்தின் போது மாநிலங்களவையில் பிரதமர் இருக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் விவாதம் நடக்கும்போது, மாநிலங்களவையில் பிரதமர் மோடி இருக்க வேண்டும் என ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநிலங்களவை நேற்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரம் குறித்து விதி எண் 267-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விதியின் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும். இதனால் ஓட்டெடுப்பு இல்லாத, எந்த அமைச்சரும் பதில் அளிக்கத் தேவையில்லாத விதி 176-ன் கீழ் குறுகிய விவாதம் நடத்த ஆளும் கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மாநிலங்களவை நேற்று காலை தொடங்கியதும், அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசுகையில், “மணிப்பூர் விவகாரம் குறித்து விதி எண் 167, 168-ன் கீழ் விவாதிக்க திமுக எம்.பி திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பிபினாய் விஸ்வம், மார்க்சிஸ்ட் எம்.பி எலாமரம் கரீம் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மணிப்பூர் குறித்த விவாதம் கடந்த ஜூலை 31-ம் தேதியே தொடங்கியும், இடையூறு காரணமாக இந்த விவாதம் நடைபெறவில்லை. முதலில் விதி எண்-ஐ அரசியல் கட்சிகள் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

விதி எண் 167-ன் கீழ் விவாதிப்பது பற்றி எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மாநிலங்களவை பாஜக தலைவர் பியூஸ் கோயல் ஆகியோர் கருத்து தெரிவிக்க வேண்டும் என ஜெகதீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், “இது தொடர்பாக எனது அறையில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சி தலைவர்கள் தயாராக இல்லை. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்று விவாதத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார். ஆனால் பிரதமர் அவையில் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் நிபந்தனை விதித்தனர். இதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட கார்கே, ‘‘எனது அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 167-வது விதியின் கீழ் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒப்புக் கொண்ட பிரகலாத் ஜோஷியும், பியூஸ் கோயலும், எனது அறையைவிட்டு வெளியே வந்தபின் வேறுவிதமாக பேசுகின்றனர்’’ என்றார்.

பிரதமர் முன்னிலையில் விதி எண் 167-ன் கீழ் மணிப்பூர் விவாதம் நடத்த அனுமதிக்கும்படி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ‘‘பிரதமர் அவைக்கு வந்தால் என்ன ஆகும்? அவர் என்ன கடவுளா?’’ என கார்கே கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் அமளி நிலவியது. இதையடுத்து மாநிலங்களவை நேற்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE