புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ம் நாளாக புதன்கிழமையும் விவாதம் தொடர்ந்தது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் பேசினர்.
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று (வியாழக்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசினார். அந்த பதிலுரையின் முழு விவரம்: > “ஏழைகளின் நலன் அல்ல; அதிகாரப் பசிதான் எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது” - மக்களவையில் பிரதமர் மோடி சாடல்
பிரதமர் பேசிக் கொண்டிருந்தபோதே.. - நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்துக் கொண்டிருந்தபோதே ராகுல் காந்தி, சோனியா காந்தி வெளியேற, அவர்களுடன் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. வெளியே வந்த சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் வெளிநடப்பு குறித்து கேள்வி எழுப்ப முயற்சிக்க அவர், "என் கட்சி இது குறித்து விளக்கும். பிரதமர் மணிப்பூர் பிரச்சினை பற்றி பேசவே இல்லை" என்றார்.
» “மணிப்பூரில் அமைதி திரும்பும்” - மக்களவையில் பிரதமர் மோடி உறுதி | பதிலுரை முக்கிய அம்சங்கள்
» “ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி திமுக” - மக்களவையில் கனிமொழிக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
இன்னும் பதிலில்லையே..! - பின்னர் வெளிநடப்பு குறித்து காங்கிரஸ் பகிர்ந்த ட்வீட்டில், "இன்னும் அந்தக் கேள்விகளுக்கான விடை கிடைக்கவில்லை. 1. கலவரம் நடந்து 100 நாட்கள் கடந்தும் பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை? 2.மணிப்பூர் பற்றி பிரதமர் மவுனம் கலைக்க 80 நாட்கள் எடுத்துக் கொண்டது எதற்காக? 3. இத்தனை வன்முறைக்குப் பின்னரும் கூட மணிப்பூர் முதல்வர் பதவி நீக்கம் செய்யப்படாதது ஏன்?" என்று மூன்று கேள்விகளை பட்டியலிட்டுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால், மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக மக்களவையில் அறிவிக்கப்பட்டது.
சரமாரி கேள்வி: மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஷிரோன்மணி அகாலி தள எம்.பி. ஹர்ஸிம்ராட் கவுர் பாதல் கூறுகையில், "அனைவருக்குமான அரசு என்று அவர்கள் சொல்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நான் வெளிநடப்பு செய்தேன். இதை அனைவரும் உணர வேண்டும். மணிப்பூரின் பெண்களுக்கு அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அவர்களுடன் நிற்கிறார்கள் என்றால் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?" என்றார்.
மோடி பதிலுரை எப்படி? - ஐக்கிய ஜனதா தள எம்.பி. ராஜீன் ரஞ்சன் சிங் கூறுகையில், "பிரதமர் மோடியின் பேச்சு அவரது பதற்றத்தையும், விரக்தியையுமே காட்டுகிறது. அவருக்கு புதிய கூட்டணியை கண்டு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மே 3-ஆம் தேதி முதல் பற்றி எரியும் மணிப்பூர் பற்றி தனது ஒன்றேமுக்கால் மணி நேர உரையில் அவர் எதுவும் பேசவில்லை. இண்டியா கூட்டணி பற்றி மட்டுமே அவர் பேசியிருக்கிறார்" என்றார்.
ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா கூறுகையில், "பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் பகடி செய்து கொண்டு, வாட்ஸ் அப் தகவல்களைப் பேசிக் கொண்டு, கமென்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதை நாங்கள் பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கவில்லையே" என்றார்.
தமிழக காங்., எம்.பி.க்களின் கருத்து: விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் வெளிநடப்பு குறித்து பேசும்போது, "14 நாட்கள் கழித்து பிரதமர் மோடி அவைக்கு வந்தும்கூட நாங்கள் முன்வைத்த அந்த 3 கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவே இல்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம்" என்றார்.
அதேபோல் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் முதல் 90 நிமிடங்களில் மணிப்பூர் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. உண்மையில் அவர் மணிப்பூர் மக்களை அவமதித்துவிட்டார். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்" என்றார்.
வெளிநடப்புக்கு குவிந்த கண்டனம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பை பாஜக எம்.பிக்கள் பலரும் கடுமையாக சாடியுள்ளனர். பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறுகையில், "காங்கிரஸின் கரங்கள் ரத்தத்தால் தோய்ந்துள்ளது. இது ஜனநாயகத்தின் படுகொலை. அவர்களிடம் பதில் இல்லையே. அவர்கள் வேறு என்ன செய்வார்கள்" என்றார்.
பாஜக எம்.பி. ஜோதிராதிய சிந்தியா கூறுகையில், "எதிர்க்கட்சிகளுக்கு ஒரே எண்ண அலைதான். அவர்களுக்கு ஒரே கொள்கைதான். அவர்களைப் பொறுத்தவரை நாட்டைவிட கட்சிதான் முக்கியம்" என்றார்.
எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு பற்றி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "பிரதமர் மோடி அற்புதமான உரையை நிகழ்த்தினார். அவர் எதிர்ப்பு கட்சிகள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கொடுத்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினரோ ஜனநாயக மரபை மதிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளனர்." என்றார்.
மத்திய அமைச்ச ஸ்மிருதி இரானி, "நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல விரும்பாமல் அதை சூறையாட நினைப்பவர்களுக்கு பிரதமரின் பேச்சுக்கு செவி கொடுக்க இயலாது. பிரதமர் மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை"எனத் தெரிவித்தார்.
"எதிர்க்கட்சியில் உள்ள எங்களின் சகாக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்கள். பிரதமர் அவைக்கு வர வேண்டும் என்றார்கள். பிரதமர் பேச வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால் பிரதமரின் உரையைக் கேட்க அவர்களுக்குப் பொறுமை இல்லை. இந்த ஒட்டுமொத்த நாடும் அவர்களுக்கு அதிகாரமும், அரசியலும் தான் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டது. வெளிநடப்பு செய்ததன் மூலம் அவர்கள் தங்களை மக்களுக்கு அம்பலப்படுத்திக் கொண்டார்கள் என்று மத்திய அமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது 3 நாட்களாக நடந்த காரசார விவாதத்தின் தெறிப்புத் துளிகள்:
காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய்: “கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இண்டியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் சென்று பார்வையிட்டனர். பிரதமர் மோடி இதுவரை அங்கு செல்லாதது ஏன். கலவரம் தொடங்கி 80 நாட்களுக்கு பிறகு அந்த மாநிலம் குறித்து பிரதமர் பேசினார். அதுவும் 30 விநாடிகள் மட்டுமே. மணிப்பூரில் அமைதி திரும்புவது தொடர்பாக பிரதமர் இதுவரை எந்த வேண்டுகோளும் விடுக்காதது ஏன். பாஜக ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் முதல்வரை பதவியில் இருந்து நீக்காதது ஏன். அவருக்கு சிறப்பு சலுகை அளிப்பது ஏன்?
மணிப்பூரில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5,000வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 60,000 பேர்நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 6,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய உள்துறையும், பாதுகாப்பு துறையும் தோல்வி அடைந்துள்ளன. மணிப்பூர் கலவரம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவையில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். பாஜக தலைவர்களுடன் அவர் மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.”
பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே: “கடந்த 1976-ல் அப்போதைய காங்கிரஸ் அரசால் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. 1980-ல் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. கடந்த 1980-ல் மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான அரசை அன்றைய காங்கிரஸ் அரசு கலைத்தது. சரத் பவார் மீது காங்கிரஸ் தலைமை தொடர்ந்து குற்றம் சாட்டியதால் அவர் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார்.
கடந்த 1953-ல் அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் ஷேக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அநீதிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரங்கேறின. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சிக்கியுள்ளனர். ரூ.5,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி மட்டுமே வைத்திருக்கிறது.”
திமுக எம்.பி டி.ஆர்.பாலு: “மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம், இங்கிலாந்து நாடாளுமன்றம் உள்ளிட்டவை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன. ஆனால் பிரதமர் மவுனம் காக்கிறார்.”
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு: “பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு வடகிழக்கு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.”
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: “எனக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்கிய மக்களவை தலைவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருந்தேன். நிவாரண முகாம்களை பார்வையிட்டு, அங்குள்ள பெண்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடினேன். நமது பிரதமர் இன்று வரை அங்கு செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூர் இந்தியாவின் ஓர் அங்கம் என அவர் கருதவில்லை. மணிப்பூரை பாஜக இரண்டாக பிரித்துவிட்டது.
மணிப்பூரில் பாரத மாதாவை நீங்கள் கொலை செய்துவிட்டீர்கள். நீங்கள் பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல. நீங்கள் தேசதுரோகி. ராணுவத்தை பயன்படுத்தி மணிப்பூரில் ஒரே நாளில் அமைதியை நிலைநாட்ட முடியும். ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. அங்கு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுகிறீர்கள். அதையே இப்போது ஹரியாணாவிலும் செய்ய முயற்சிக்கிறீர்கள்.”
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி: “எனக்கு முன்பு பேசியவரின் ஆக்ரோஷமான நடத்தையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, பாரத மாதா கொலை செய்யப்பட்டதாக ஒருவர் பேசுகிறார். அதை காங்கிரஸார் கைதட்டி வரவேற்கின்றனர். மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி. அது பிரிக்கப்படவில்லை. அதை பிரிக்கவும் முடியாது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறினர். எதிர்க்கட்சிகள் அதை ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர்.
விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது அவையில் உள்ளவர்களை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார். பெண்கள் நிறைந்த ஒரு அவையில், பெண்கள் மீது வெறுப்பு கொண்ட ஒருவர்தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார். இதுதான் அவரது குடும்ப கலாச்சாரமா?”
மத்திய அமைச்சர் அமித் ஷா: “மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் முழு நம்பிக்கை உள்ளது. ஊழல், வாரிசு அரசியலுக்கு பிரதமர் மோடி முடிவுகட்டி உள்ளார். இந்நிலையில், நாட்டு மக்களை தவறாகவழி நடத்தவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன.”
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: “மணிப்பூராக இருந்தாலும், ராஜஸ்தானாக இருந்தாலும், டெல்லியாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை நாங்கள் முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறோம். இதை நாங்கள் அரசியலாக்குவதில்லை. பெண்களின் பாதுகாப்பு குறித்து திமுக பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவையில் அவரது சேலையை இழுத்த கட்சி திமுக. மீண்டும் இந்த அவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என்று அப்போது ஜெயலலிதா சபதம் செய்து, அதன்படியே 2 ஆண்டுகள் கழித்து முதல்வராக அவைக்கு வந்தார். ஆனால், நீங்கள் கவுரவ சபை குறித்தும், திரவுபதி குறித்தும் பேசுகிறீர்கள். ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது மறந்துவிட்டதா?
சிலப்பதிகாரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதன் உண்மை உணர்வை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அது தமிழுக்கு நேர்ந்த இழுக்கு இல்லையா? ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, அந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் நீதியின் அடையாளமாக பிரதிஷ்டை செய்திருக்கிறார்.”
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago