புதுடெல்லி: “வரும் காலத்தில் மணிப்பூரில் அமைதி திரும்பும்; மணிப்பூர் மக்களோடு நாடு இருக்கிறது” என்று மக்களவையில் பிரதமர் மோடி உறுதியளித்தார். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை இல்லை என்றும், அதிகாரப் பசிதான் அவர்களின் மனதில் உள்ளது என்றும் அவர் சாடினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளாக நேற்றும் விவாதம் தொடர்ந்தது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் பேசினர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு அதிர்ஷ்டமானது: இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 மணி நேரத்துக்கும் மேலாக பதிலளித்து பேசியது: “எங்கள் அரசு மீதான நம்பிக்கையை நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார்கள். கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு நன்றி கூறவே நான் இப்போது இங்கே இருக்கிறேன். கடவுள் மிகவும் அன்பானவர். அவர் சில ஊடகங்கள் மூலம் பேசுகிறார். கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நான் பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டேன். ‘இந்தச் சோதனை எங்களுக்கானது அல்ல; எதிர்க்கட்சிகளுக்கானது’ என்று. இறுதியில், அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் தோல்வியை சந்தித்தார்கள்.
அந்த வகையில், நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எப்போதுமே எங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது. வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பாஜகவும் முன் எப்போதும் இல்லாத அளவு மிகப் பெரிய வெற்றியை மக்களின் ஆசிர்வாதத்தோடு பெற வேண்டும் என்பதாக நீங்கள் (எதிர்க்கட்சிகள்) முடிவெடுத்துவிட்டீர்கள். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் எத்தகைய விவாதத்தை மேற்கொண்டன? நீங்கள் பேசியதை நான் சமூக ஊடகங்களில் பார்த்தேன். நமது நோக்கம் நாட்டின் வளர்ச்சி குறித்ததாக இருக்க வேண்டும். அதுதான் தற்போதைய தேவை. கனவை நனவாக்கும் சக்தியை நமது இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஊழலற்ற அரசையும், விருப்பங்களையும், வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறோம். நாட்டின் நம்பிக்கையை மிகப் பெரிய உயரத்துக்கு நாங்கள் கொண்டு சென்றிருக்கிறோம். ஆனால், உலகின் முன் நாட்டின் மதிப்பை சீர்குலைக்க சிலர் முயல்கிறார்கள். ஆனாலும், இந்தியாவின் நம்பிக்கை உலக அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
» “ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி திமுக” - மக்களவையில் கனிமொழிக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
அதிகாரப் பசிதான் எதிர்க்கட்சிகளின் மனங்களில் உள்ளது: இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான சில விஷயங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விசித்திரமானவை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பெயர் இல்லை. அவர் பேசுவதற்கு அவரது கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், நீங்கள்(சபாநாயகர்) பெருந்தன்மையுடன் பேசுவதற்கான அவரது நேரம் முடிந்த பிறகும் அவர் பேச அனுமதித்தீர்கள். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏன் ஓரம் கட்டினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கொல்கத்தாவில் இருந்து தொலைபேசி வந்திருக்கலாம். காங்கிரஸ் கட்சி அவரை மீண்டும் மீண்டும் அவமதிக்கிறது. சில கட்சிகள் தங்கள் நடத்தையின் மூலம் நாட்டைவிட தங்கள் கட்சியே பெரியது என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன. உங்களுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை கிடையாது; அதிகாரப் பசிதான் உங்கள் மனங்களில் உள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான சில விஷயங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விசித்திரமானவை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பெயர் இல்லை. அவர் பேசுவதற்கு அவரது கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், நீங்கள்(சபாநாயகர்) பெருந்தன்மையுடன் பேசுவதற்கான அவரது நேரம் முடிந்த பிறகும் அவர் பேச அனுமதித்தீர்கள். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏன் ஓரம் கட்டினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கொல்கத்தாவில் இருந்து தொலைபேசி வந்திருக்கலாம். காங்கிரஸ் கட்சி அவரை மீண்டும் மீண்டும் அவமதிக்கிறது.
எதிர்க்கட்சிகள் சபித்தால் நல்லது நடக்கிறது: சில கட்சிகள் தங்கள் நடத்தையின் மூலம் நாட்டைவிட தங்கள் கட்சியே பெரியது என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன. உங்களுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை கிடையாது; அதிகாரப் பசிதான் உங்கள் மனங்களில் உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ரகசியமான ஒரு ஆசீர்வாதம் இருக்கிறது. அது என்னவென்றால், அவர்கள் யாரெல்லாம் நன்றாக இருக்கக்கூடாது என்று கருதுகிறார்களோ அவர்கள் எல்லாம் நன்றாக இருப்பார்கள். அதற்கு உதாரணமாக நானே உங்கள் முன் நிற்கிறேன். 20 வருடங்களாக அவர்கள் பலவாராக நினைத்தார்கள். ஆனாலும், நான் நன்றாகவே இருக்கிறேன்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களைத் தாண்டி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் நாட்டின் பெருமைகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. எல்ஐசி நிறுவனத்தின் பணம் மூழ்கிவிட்டதாகக் கூறினார்கள். ஆனால், அந்த நிறுவனம் வலிமை அடைந்து வருகிறது. அவர்கள் எந்த நிறுவனம் குறித்தெல்லாம் கதை முடிந்தது என்று கூறினார்களோ, அவை எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இதே வகையில், அவர்கள் நாட்டையும் ஜனநாயகத்தையும் சபிக்கிறார்கள். நாடும் ஜனநாயகமும் மேலும் வலிமை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாமும்(பாஜக) வலுவாக இருக்கப் போகிறோம்.
உலகின் 3 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும்: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவோம் என்று நாம் கூறினால், எப்படி இதை சாத்தியப்படுத்துவீர்கள் என்பது அல்லவா அவர்களின் கேள்வியாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இதையும் நான்தான் கற்றுக்கொடுக்க வேண்டி இருக்கிறது. எல்லாம் தானாகவே நடக்கும் என்று காங்கிரஸ் கூறினால், அந்த கட்சிக்கு கொள்கையோ, சிந்தனையோ, தொலைநோக்குப் பார்வையோ, உலகின் பொருளாதார நடைமுறை குறித்த புரிதலோ, உலகை வலுப்படுத்தும் இந்தியாவின் பொருளாதாரம் குறித்த புரிதலோ இல்லை என்றுதான் அர்த்தம்.
நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இல்லை. ஆணவம் காரணமாக அவர்கள் உண்மையைப் பார்க்க மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் 1962ல் வெற்றி பெற்றார்கள். அதன் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் வேண்டாம் என்று கூறிவிட்டது. மேற்கு வங்கத்தில் 1972 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு அந்த மாநில மக்களும் காங்கிரஸ் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். உத்தரப்பிரதேசம், பிஹார், குஜராத் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி 1985ல் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்த மாநிலங்களும் காங்கிரஸ் வேண்டாம் என்று கூறிவிட்டன.
இந்த அரசின் திட்டமிடலும், கடின உழைப்பும் தொடரும். தேவைக்கேற்ப அதில் புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். செயல்திறனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். 3வது பெரிய பொருளாதாரமாக நாடு இருக்கும். இதை நாடு நம்புகிறது. நீங்கள் 2028ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, உலகின் முதல் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும்.
எதிர்க்கட்சிகள் ஆணவத்தில் இருக்கின்றன: NDA என்பதில் கூடுதலாக இரண்டு 'I' சேர்த்து I.N.D.I.A. என எதிர்க்கட்சிகள் தங்கள் அணிக்கு பெயர் வைத்துள்ளன. இதில் ஒரு 'I' 26 கட்சிகளின் தான் என்ற ஆணவத்தையும், மற்றொரு 'I' ஒரு குடும்பத்தின் தான் என்ற ஆணவத்தையும் குறிக்கிறது. இதிலும்கூட அவர்கள் NDA-வை அவர்கள் திருடிவிட்டார்கள். அதோடு, இந்தியாவை I.N.D.I.A. என உடைத்துவிட்டார்கள்.
இலங்கை எரிந்தது அனுமனால் அல்ல; ராவணனின் அகந்தையால் என்பது உண்மைதான். அதோடு, மக்கள் ராமரை விரும்புகிறார்கள். அதனால்தான், உங்களுக்கு(காங்கிரஸ் கட்சிக்கு) நாடாளுமன்றத்தில் இருந்த பலத்தை 400ல் இருந்து 40 ஆக குறைத்திருக்கிறார்கள். எங்கள் அரசை மக்கள் இரண்டுமுறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு ஏழை மனிதன் எப்படி பிரதமராக இருக்கலாம் என்ற உங்களின் எண்ணம் உங்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது. 2024லும் மக்கள் உங்களை தூங்கவிடப் போவதில்லை.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இரட்டை இலக்க பணவீக்கம், ஊழல், கொள்கை முடக்கம், நிலையின்மை, தாஜா செய்யும் அரசியல், வாரிசு அரசியல், வேலைவாய்ப்பின்மை, வன்முறை, பயங்கரவாதம் இவை எல்லாம் உறுதியாக நடக்கும். மோடியின் வாக்குறுதி என்னவென்றால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா உலகின் முதல் 3 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும்.
காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை என்ன என்பது எனக்குப் புரிகிறது. தோல்வி அடைந்த ஒரு பொருளை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அது தோல்வி அடைகிறது. இதன் விளைவு, வாக்காளர்கள் மீதான அதன் கோபம் தற்போது உச்சத்திற்கு சென்றுள்ளது. ஆனால், கொள்ளையர்களிடம் நாட்டை கொடுப்பதில்லை என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
மணிப்பூரில் அமைதி திரும்பும்: மணிப்பூரில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன. வரும் காலத்தில் மணிப்பூரில் அமைதி திரும்பும் என்று மக்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். மணிப்பூரின் பெண்கள், மகள்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது எல்லாம், நாடு உங்களோடு இருக்கிறது என்பதைத்தான்.
கச்சத்தீவு என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது என்று கேட்டால், உடனே கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று திமுக அரசின் முதல்வர் எனக்கு கடிதம் எழுதுகிறார். அந்த தீவை வேறு ஒரு நாட்டுக்குக் கொடுத்தது யார்? அது நமது பாரத மாதாவின் அங்கம் இல்லையா? கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான் (இலங்கைக்கு) கொடுத்தது.
1966ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி மிசோரம் மாநிலத்தின் ஆதரவற்ற குடிமக்கள் மீது விமானப்படையைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. அது வேறு எந்த நாட்டின் விமானப்படையாக இருந்தாலும் அது குறித்து காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும். மிசோரம் மக்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? அவர்களின் பாதுகாப்பில் இந்த அரசுக்கு பொறுப்பு இல்லையா?
மணிப்பூரில் கிளர்ச்சி அமைப்புகளின் விருப்பப்படி எல்லாம் நடந்தபோது யாருடைய ஆட்சி அந்த மாநிலத்தில் இருந்தது? மணிப்பூரின் அரசு அலுவலகங்களில் மகாத்மா காந்தியின் படம் அனுமதிக்கப்படாதபோது அங்கு யாருடைய அரசு ஆட்சியில் இருந்தது? மணிப்பூர் பள்ளிகளில் தேசிய கீதம் இசைக்கப்படக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டபோது அங்கு யார் ஆட்சியில் இருந்தார்கள்? எதிர்க்கட்சிகளின் வலி என்பது தேர்ந்தெடுக்கப்பட்டது. அரசியலைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது.
2028ல் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வாருங்கள்: 2023ல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் என்று, கடந்த 2018ல் நான் அவர்களுக்கு ஒரு வேலை கொடுத்தேன். அவர்கள் என் வார்த்தையை பின்பற்றினார்கள். ஆனாலும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. 5 ஆண்டுகளில் அவர்கள் சிறப்பாக செய்திருக்க வேண்டும். அவர்களிடம் எந்த தயாரிப்பும் இல்லை; படைப்பாற்றலும் இல்லை. வரும் 2028ம் ஆண்டுக்காக உங்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பைத் தருகிறேன். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது அவர்கள் தயாராக வர வேண்டும் என்று அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றுபிரதமர் மோடி உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. | அதன் விவரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago