“ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி திமுக” - மக்களவையில் கனிமொழிக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சியான திமுக, பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கனிமொழிக்கு பதிலடி தரும் வகையில் மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, மணிப்பூர் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி பேசிய திமுக எம்.பி கனிமொழி, நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி மத்திய அரசை குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், “மணிப்பூராக இருந்தாலும், ராஜஸ்தானாக இருந்தாலும், டெல்லியாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை நாங்கள் முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறோம். இதை நாங்கள் அரசியலாக்குவதில்லை.

பெண்களின் பாதுகாப்பு குறித்து திமுக பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவையில் அவரது சேலையை இழுத்த கட்சி திமுக. மீண்டும் இந்த அவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என்று அப்போது ஜெயலலிதா சபதம் செய்து, அதன்படியே 2 ஆண்டுகள் கழித்து முதல்வராக அவைக்கு வந்தார். ஆனால், நீங்கள் கவுரவ சபை குறித்தும், திரவுபதி குறித்தும் பேசுகிறீர்கள். ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது மறந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வதாக கனிமொழி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “சிலப்பதிகாரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதன் உண்மை உணர்வை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அது தமிழுக்கு நேர்ந்த இழுக்கு இல்லையா? ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, அந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் நீதியின் அடையாளமாக பிரதிஷ்டை செய்திருக்கிறார்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE