மும்பையில் அமைதி பேரணிக்கு சென்ற மகாத்மாவின் கொள்ளு பேரன் துஷார் காந்தியை தடுத்து நிறுத்திய போலீஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு மும்பை கிர்கான் சவ்பதியிலிருந்து ஆகஸ்ட் கிரந்தி மைதானம் வரை நேற்று அமைதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி, சமூக சேவகி தீஸ்தா சீதல்வாட், சுதந்திர போராட்ட வீரர் ஜி.ஜி பரிக் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.பேரணியில் பங்கேற்க மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி நேற்று காலை புறப்பட்டார். அவரை தடுத்த போலீஸ் அதிகாரி ஒருவர், சட்டம், ஒழுங்கு பிரச்சினையால் அமைதி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்நிகழ்ச்சிக்கு நீங்கள் செல்ல முடியாது’’ என கூறியுள்ளார். இதேபோல் தீஸ்தா சீதல்வாட், ஜி.ஜி. பரிக் ஆகியோரும் போலீஸாரால் தடுக்கப்பட்டுள்ளனர்.

இதனால் துஷார் காந்தி வீடு திரும்பினார். அதன்பின் சிறிது நேரம் கழித்து, ஆகஸ்ட் கிரந்தி மைதானத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்கு துஷார் காந்தியை போலீஸார் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்த துஷார் காந்தி, ‘‘வெள்ளையனே வெளியேறு தின நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற என்னை, போலீஸார் தடுத்து நிறுத்தி சாந்தா குரூஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, என்னை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தினத்தில் எனது கொள்ளு தாத்தாவை இங்கிலாந்து போலீஸார் கைது செய்ததை எண்ணி பெருமிதம் அடைகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அமைதி பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்த தகவல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் கிரந்தி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மலரஞ்சலி செலுத்துவதற்கு துஷார் காந்தி, தீஸ்தா சீதல்வாட், ஆகியோர் உட்பட பலர் அனுமதிக்கப்பட்டனர். பரிக், கிர்கான் பகுதியில் உள்ள திலகர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு வீடு திரும்பினார். ’’ என்றார். அமைதி பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்க கிர்கன் பகுதிக்கு நேற்று காலை வந்த 20 பேரை போலீஸார் பிடித்துச் சென்று மாலையில் விடுவித்தனர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை கடந்த 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதியன்று மும்பை கோவாலியா டேங்க் பகுதியில் மகாத்மா காந்தி தொடங்கினார். அது பின்னர் ஆகஸ்ட் கிரந்தி மைதானம் என அழைக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் கிரந்தி மைதானத்தில், நேற்று ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE