மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ‘ராகுல் ஃபோபியா’ - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ‘ஃராகுல் ஃபோபியா' இருக்கிறது என்றும், அதனால்தான் பறக்கும் முத்தம் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசியதை அடுத்து, அவருக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராகுல் காந்தி அவையை விட்டு வெளியேறினார். அப்போது அவர் ‘பறக்கும் முத்தம்’ கொடுத்தபடி புறப்பட்டார்.

இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுத்துபூர்வ புகார் அளித்துள்ள 20-க்கும் மேற்பட்ட பாஜக பெண் எம்.பி.க்கள், 'அவையில் ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அநாகரிகமாக நடந்து கொண்டார். அவரது இந்த நடவடிக்கை பெண் எம்.பி.க்களை அவமதித்த செயல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் கண்ணியத்துக்கும் எதிரானது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாஜகவின் புகாருக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்திருக்கிறது. இந்தப் புகார் குறித்து பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "மணிப்பூரில் அரசு செயல்படாத நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அரசை நோக்கி முக்கிய கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பினார். அந்தக் கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்கவில்லை. இது பாஜகவின் அற்புதமான தந்திரம். முக்கிய கேள்விகளை நாங்கள் எழுப்பும் ஒவ்வொரு முறையும், வரலாற்றில் நடந்த நிகழ்வுகளுக்குச் செல்வதன் மூலமோ அல்லது தொடர்பில்லாத விஷயங்களை பற்றி பேசுவதன் மூலமோ பாஜக அதை திசை திருப்புகிறது" என தெரிவித்துள்ளார்.

"ராகுல் காந்தி எப்போதுமே பெண்களை மதிப்பவர். ஆனால், அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதை பாஜக விரும்பவில்லை" என காங்கிரஸ் பெண் எம்.பி கீதா கோடா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "ராகுல் ஃபோபியாவை ஸ்மிருதி இரானி கொண்டிருக்கிறார். அதில் இருந்து வெளிவர அவர் முயல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ராகுல் மீதான அச்சம் என்பதையே அவர் ‘ராகுல் ஃபோபியா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE