மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் காரசார விவாதம் - பிரதமர் மோடி நாளை பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பாஜக கூட்டணி, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக இண்டியா கூட்டணி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கியது.

ராகுல் காந்தி பேசவில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதலில் விவாதத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் விவாதத்தை தொடங்கினார்.

அவர் பேசியதாவது: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இண்டியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் சென்று பார்வையிட்டனர். பிரதமர் மோடி இதுவரை அங்கு செல்லாதது ஏன். கலவரம் தொடங்கி 80 நாட்களுக்கு பிறகு அந்த மாநிலம் குறித்து பிரதமர் பேசினார். அதுவும் 30 விநாடிகள் மட்டுமே.

மணிப்பூரில் அமைதி திரும்புவது தொடர்பாக பிரதமர் இதுவரை எந்த வேண்டுகோளும் விடுக்காதது ஏன். பாஜக ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் முதல்வரை பதவியில் இருந்து நீக்காதது ஏன். அவருக்கு சிறப்பு சலுகை அளிப்பது ஏன்.

மணிப்பூரில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5,000வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 60,000 பேர்நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 6,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய உள்துறையும், பாதுகாப்பு துறையும் தோல்வி அடைந்துள்ளன.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவையில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். பாஜக தலைவர்களுடன் அவர் மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆளும்கட்சி தரப்பில் பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே பேசியதாவது: ராகுல் உரையை கேட்க காத்திருந்தோம். ஆனால் கவுரவ் கோகோய் பேசுகிறார். ராகுல் காந்தியால் இன்று பேச முடியவில்லை என்று கருதுகிறேன். அவர் பின்னர் விழித்தெழக்கூடும்.

கடந்த 1976-ல் அப்போதைய காங்கிரஸ் அரசால் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. 1980-ல் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. கடந்த 1980-ல் மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான அரசை அன்றைய காங்கிரஸ் அரசு கலைத்தது. சரத் பவார் மீது காங்கிரஸ் தலைமை தொடர்ந்து குற்றம் சாட்டியதால் அவர் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார்.

கடந்த 1953-ல் அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் ஷேக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அநீதிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரங்கேறின.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சிக்கியுள்ளனர். ரூ.5,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி மட்டுமே வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு: திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு பேசும்போது, “மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம், இங்கிலாந்து நாடாளுமன்றம் உள்ளிட்டவை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன. ஆனால் பிரதமர் மவுனம் காக்கிறார்’’ என்று குற்றம் சாட்டினார்.

சவுகதா ராய் (திரிணமூல்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ், டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி) உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுகூறும்போது, “பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு வடகிழக்கு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது’’ என்றார்.

16 மணி நேர விவாதம்: நம்பிக்கை இல்லா தீர்மானம்மீது இன்றும் விவாதம் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக 16 மணி நேரம் விவாதம் நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி நாளை பதில் அளிப்பார் என்று தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நாளை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE