பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு, இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகராக விளங்குகிறது. இங்கு 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். கோலார் தங்கவயல், மைசூரு, தும்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் ஓசூரில் இருந்தும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிமித்தமாக தினமும் வந்து செல்கின்றனர். இதனால் நாட்டில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதல் இடத்திலும், உலக அளவில் இரண்டாவது இடத்திலும் பெங்களூரு உள்ளது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த போக்குவரத்து நிபுணர் எம்.என்.ஸ்ரீஹரி தலைமையிலான குழுவினர் நகரின் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு அறிக்கையை அண்மையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் வழங்கினர்.
இதுகுறித்து எம்.என்.ஸ்ரீஹரி கூறியதாவது: பெங்களூருவின் மக்கள் தொகைஅதிகரித்து வந்தாலும், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் அந்த வேகத்தில்நடைபெறவில்லை. குறிப்பாக போக்குவரத்து வசதிகள் போதிய அளவில் நவீன மயமாக்கப்படவில்லை. பெங்களூருவின் உள்ள வாகனங்கள், சாலைகள், மேம்பாலங்கள், போக்குவரத்து மேலாண்மை, உள்கட்டமைப்பு பற்றாக்குறை போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
பெங்களூரு மாநகரம் 88 சதுர கிலோ மீட்டரில் இருந்து 985 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. தற்போது 1.5 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இருக்கின்றன. உள்வட்ட சாலைகள், வெளிவட்ட சாலைகள், நகரசாலைகள் ஆகியவை சேர்ந்து மொத்தமாக 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் உள்ளன. 60 பெரிய மேம்பாலங்கள் இருக்கின்றன. ஆனால் இவை மக்கள்தொகை பெருக்கம், வாகன பெருக்கம் ஆகியவற்றைவிட குறைவாக உள்ளது. இதனால் எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வீணாகும் 2 மணி நேரம்: பெங்களூருவில் ஒரு வாகன ஓட்டி சராசரியாக நாள்தோறும் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் வீணாக செலவிட நேர்கிறது. 30 நிமிடங்களில் செல்ல வேண்டிய அலுவலகத்துக்கு 1.30 மணி நேரம் வரை செலவாகிறது. வீணாகும் இந்த 1 மணி நேரத்தில் அவர் கூடுதலாக வேலை பார்த்திருந்தால், அதிக வருமானம் கிடைத்திருக்கும். ஆனால் போக்குவரத்து நெரிசலால் இந்த வருமானத்தை இழக்கிறார்.
இவ்வாறு போக்குவரத்து நெரிசலில் வீணாகும் நேரம், எரிபொருள், வாகனதேய்மானம், வாடகை வாகன கட்டணம்,மனித வளம், அதற்கான ஊதியம் உள்ளிட்டவற்றின் சராசரியை கணக்கிட்டு ஆய்வு செய்தோம். அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு ரூ.19,725 கோடி இழப்பு ஏற்படுகிறது.
பெங்களூருவில் 80 சதவீதத்துக்கும் மேலான மேம்பாலங்கள் நல்லமுறையில் திட்டமிட்டு கட்டப்படவில்லை. அவை குறுகலாகவும், கூடுதல் வழி இல்லாதவையாகவும் உள்ளன. நகரின் மையப் பகுதியில் இருக்கும் பெரும்பாலான சாலைகள் ஒருவழி சாலைகளாக இருக்கின்றன.இதேபோல வாகனங்களை நிறுத்தபோதிய இடங்கள் இல்லை.
சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மோசமான சாலைகள், சாலைகளில் இருக்கும் பள்ளங்கள், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமை ஆகியவற்றாலும் நெரிசல் ஏற்படுகிறது.
தீர்வு என்ன?: பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு மெட்ரோ ரயில், மோனோ ரயில், பொது போக்குவரத்து ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும். செயற்கைக்கோள், செயற்கை நுண் ணறிவு ஆகியவற்றின் மூலம் போக்குவரத்து நெரிசலை கண்டு, உடனடியாக மாற்று வழிகளை பயன் படுத்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்க அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். கூடுதல் நீளமான சாலைகள், சீரமைக்கப்பட்ட மேம்பாலங்கள், கூடுதல் வாகன நிறுத்துமிடங்கள், போக்குவரத்து சிக்னல்களை மாற்றி அமைத்தல் ஆகியவற்றால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
அவ்வாறு செய்தால் பெங்களூருவில் இன்னும் கூடுதலாக பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனங்களும், உள்ளூர் தொழிற்சாலைகளும் தொழில் தொடங்க முன்வரும். அதன் மூலம் நகருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இவ்வாறு போக்குவரத்து நிபுணர் எம்.என்.ஸ்ரீஹரி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago