மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் | காங்கிரஸ் சார்பில் விவாதத்தை தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று (ஆக.08) விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்றைய விவாதத்தை மக்களவையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தொடங்கி வைத்து முதல் பேச்சாளராக உரையாற்றுவார் எனத் தெரிகிறது.

ராகுல் காந்தி, மனீஷ் திவாரி, கவுரவ் கோகோய் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றவுள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் நிஷாந்த் துபே விவாதத்தின் முதல் பேச்சாளராக இருப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன,

மீண்டும் அவைக்கு வந்த ராகுல் காந்தி.. அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவியை மக்களவை செயலகம் மீண்டும் வழங்கியது.

இதனையடுத்து 4 மாத இடைவெளிக்குபிறகு, அவை நடவடிக்கைகளில் நேற்று (திங்கள்கிழமை) அவர் பங்கேற்றார். இந்நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். கடைசியாக ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி 2023-ல் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார்.

12 மணிக்குத் தொடங்கும் விவாதம்: மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் சரியாக பகல் 12 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரத்துக்குப் பின்னர் தொடங்கும் இந்த விவாதம் மாலை 7 மணி வரை விவாதம் நீடிக்கும். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இதே நேரத்தில்தான் விவாதம் நடைபெறும். ஆகஸ்ட் 10 அன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 9 அன்று உள் துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்தில் தலையிட்டுப் பேசுவார் எனத் தெரிகிறது. தேவைப்பட்டால் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

பலத்துடன் பாஜக: பிரதமர் மோடி சந்திக்கும் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம் இது. இதில் பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளன. பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எந்தத் தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் விலகி நிற்கின்றன.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பலத்தை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு 301 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோலவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதமரை அவையில் பேச வைப்பதற்காக மட்டுமே என்பது இதன் மூலம் புலப்படுகிறது. இருப்பினும் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்ட் 8 முதல் 11 வரை தவறாமல் அவைக்கு வர வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற கொறடா உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்