சீனா - காங்கிரஸ் இடையே தொப்புள் கொடி உறவு: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் டெல்லியில் நேற்று கூறியதாவது:

சீனா, காங்கிரஸ், நியூஸ்கிளிக் ஊடகம் ஆகியவை இடையே தொப்புள் கொடி உறவு தொடர்கிறது. நியூஸ்கிளிக் ஊடகம் சீனாவுக்கு ஆதரவாகவும் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் செய்திகளை வெளியிட்டு வருகிறது. அந்த ஊடகம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி மூலம் சீனாவிடம் இருந்து நியூஸ்கிளிக் நிதியுதவி பெறுவது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டிலேயே இந்த ஊடகம் தேச விரோதமானது என்று கூறினோம்.

பொய் செய்தி: காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சீனாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் நியூஸ்கிளிக் பொய் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

சீன தூதரகத்திடம் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிதியுதவி பெற்றது. இந்த நேரத்தில் சீனாவுக்கும் காங்கிரஸுக்கும் உள்ள தொடர்பு குறித்து ராகுல்காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE