மணிப்பூர் தலைவர்களுடன் சோனியா, ராகுல் சந்திப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கலவரம் நடக்கும் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர்களை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் 2 பிரிவினரிடையே மணிப்பூரில் கடந்த 3 மாத காலமாக மோதல், வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மணிப்பூரில் இருந்து வந்த மாநிலத் தலைவர்களை, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சந்தித்துப் பேசினர். மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் இபோபி சிங் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இருந்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது மணிப்பூரில் தற்போதுள்ள சூழ்நிலை, நிலவரம் தொடர்பாக சோனியா, ராகுல், கார்கே ஆகியோரிடம் இபோபி சிங் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

மேலும் அங்கு அமைதி திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவ வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்தக் குழுவில் காங்கிரஸ் எம்எல்ஏவும், மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவருமான கே.மேகசந்திர சிங், மாநில காங்கிரஸ் சட்டப் பேரவை துணைத் தலைவர் கே. ரஞ்சித் சிங், மணிப்பூர் மாநில காங்கிரஸ் பொருளாளர் லோகேஷ்வர் சிங் உள்ளிட்டோரும் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE