சக்கர நாற்காலியில் மாநிலங்களவைக்கு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி அவசர சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்றிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு இன்று வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அவர் விவாதத்தில் பங்கேற்க வந்தார்.

டெல்லி அவசர சட்டம் குறித்த விவாதத்தின்போது அனைவரும் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அவர் பங்கேற்றாலும் மசோதா குறித்து எதுவும் பேசவில்லை.

முன்னதாக, டெல்லி அவசர சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியது. சுமார் 8 மணிநேர விவாதத்துக்கு பின் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதா மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 131 எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து 102 வாக்குகளும் பதிவாகின. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு அளித்தன.

மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஆம் ஆத்மியின் ராகவ் சதா, "டெல்லிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் விரும்பினர். ஆனால், தற்போதைய பாஜக தனது சொந்தக் கட்சித் தலைவர்களை பின்பற்றாமல் செயல்படுகிறது. டெல்லியில் தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்ததற்கு, இந்த மசோதா மூலம் பாஜக எதிர்வினையாற்றுகிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை. நாட்டின் தலைநகரில் பயனுள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. சொல்லப்போனால் இந்த மசோதா, காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த அதே அதிகாரங்களை டெல்லி அரசுக்கு வழங்குகிறது. ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே தற்போது இம்மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கிறது" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE